Iraiyanbu visit cuddalore prison

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றி கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார் முனைவர் இறையன்பு. ஓய்வுக்குப் பிறகும் அவர் ஓய்வில் இல்லை. சமுதாயப் பணி, இலக்கியப் பணி ஆகியவற்றில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் இறையன்பு.

Advertisment

ஆட்சிப் பணியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு, 1992-1994 காலகட்டத்தில் கடலூரில் கூடுதல் ஆட்சியராகப் பணி புரிந்தார் இறையன்பு. அப்போது அவர் ஆற்றிய அரிய பணிகள் பல. அவற்றுள் ஒன்றுதான், கடலூர் கேப்பர் மலையில் உள்ள சிறைச்சாலையைச் சுற்றி சுமார் 12,000 முந்திரி, தேக்கு மரக் கன்றுகளை நட்டது.

Advertisment

இந்த நிலையில், புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று (2-10-2023) கடலூர் வந்த அவருக்கு,முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தான்நட்டு வைத்த முந்திரிகளும், தேக்குகளும் என்ன நிலையில் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.

Iraiyanbu visit cuddalore prison

காலை 10 மணியளவில் புறப்பட்டு சிறைச்சாலைக்குச் சென்ற அவருக்கு, அங்கு கண்ட காட்சி பெரும் மலைப்பை ஏற்படுத்தியது. கண்களில் ஒரு புத்தொளி; முகத்தில் ஒரு மலர்ச்சி. காரணம், தான் கைக்குழந்தைகளாய் விட்டுச் சென்ற கன்றுகள்இன்று கட்டிளங்காளைகளாய் நெடுதுயர்ந்து வளர்ந்து காடுபோல் காட்சியளித்தன. ஆம், காடுதான். வழிதவறி ஏதோ ஒரு வனத்தினுள் நுழைந்துவிட்டோமோ என எண்ணும் வகையில் அவ்வளவு அடர்த்தியாய் அத்தனை மரங்களும் உயர்ந்து நின்றன. தேக்கு மரங்கள் அப்படியென்றால், முந்திரிகளோ சரியான இடைவெளிகளில் பசுமைக் குடைகளாய் விரிந்து வளர்ந்து விழிகளை ஈர்த்தன.

சிறைச்சாலை ஒரு கோட்டை போன்றும், அதைச் சுற்றி இருந்த இந்த மரங்கள் காவலுக்கு அணி வகுத்து நிற்கும் போர் வீரர்கள் போன்றும் தோற்றமளித்தன. அப்போது அவருடைய கண்களின் பனித்துளிகள் தோன்றுவதை அருகிலிருந்தோர் பார்த்து வியந்தனர். அருகிலிருந்த அலுவலர் ஒருவர் அந்த மரங்களின் தற்போதைய மதிப்பு பல கோடி ரூபாய் என்ற கூறியபோது அவருக்குள் ஒரு தன்னிறைவு ஏற்பட்டது.

அங்கு அவருக்கு மற்றோர் இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது. அன்று காந்தி பிறந்த நாள் என்பதால் சிறைக் கைதிகளுக்குப் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறைச்சாலை அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்கஅதில் கலந்து கொண்டார் இறையன்பு.

Iraiyanbu visit cuddalore prison

பல்வேறு தலைப்புகளில் அவர் எழுதிய 150 புத்தகங்களை, கைதிகள் வாசித்துப் பயன்பெறும் பொருட்டு அங்கிருந்த நூலகத்திற்குப் பரிசளித்து கைதிகளுடன் உரையாடினார். அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன், அவர்கள் மனத்தில் சிறிதளவேனும் மாற்றம் ஏற்படும் வகையில் பல்வேறு நீதி நெறிகளை, காந்தியின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளுடன் எடுத்துக் கூறி, அவற்றை அறிவுரையாக இல்லாமல் அனுபவப் பகிர்வாகப் பேசினார். அங்கிருந்த கைதிகளுக்கு அது ஒரு செவிக்குணவாக அமைந்தது.

அடுத்து, பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள். அமர்ந்து பார்ப்பதற்கு நாற்காலிகளை எடுத்து வந்தனர் காவலர்கள். ஆனால், அவர் நாற்காலியை மறுத்துவிட்டு கைதிகளோடு தரையில் அமர்ந்து விட்டார். பார்த்தவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. குழந்தைகளின் நடனங்களைக் கண்டுகளித்து, அவர்களுடன் நிழற்படம் எடுத்து, பின் அங்கிருந்து புறப்பட்டார். கைதிகளும், காவலர்களும், பள்ளிச் சிறார்களும் மனம் நெகிழ்ந்து, கைகூப்பி அவருக்கு விடையளித்தனர்.

அந்த நிகழ்வு அவருக்கு மட்டுமல்லாமல் உடனிருந்த அனைவருக்கும் ஒரு மனநிறைவு நாளாக அமைந்தது என்கிறார்கள்.