கோவையில் உள்ள சர்ச் மற்றும் கோயில்களில் குண்டு வைக்கத் திட்டமிட்டதாகக் உ.பா சட்டத்தில கோவை போத்தனூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை முதன்மை மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்துள்ளதாக கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கடந்த 12ம்தேதி கோவை போத்தனூர் காவல்துறையினர் கோவை உக்கடத்தைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான் மற்றும் கரும்புக்கடையைச் சேர்ந்த ஷேக் சஃபியுல்லாஹ் ஆகிய மூவரை சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த மூன்று நபர்களும் தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்றும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகள் மற்றும் தீவிரவாதச் செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைதளங்கள் மூலமாகப் பரப்பியதாகவும், தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றச் சதித் திட்டம் தீட்டி இருப்பதாகவும் கோவையில் உள்ள சர்ச் மற்றும் கோயில்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும்' போத்தனூர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், இந்த மூன்று நபர்களையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போத்தனூர் காவல்துறையினர் சார்பாக நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இன்று மனுவை விசாரித்த நீதிபதி சக்திவேல் மூவரையும் ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.