நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கடந்த ஒரே வாரத்தில், 3 பேர் 'உடைந்த கொம்பு சங்கர்' என்ற ஒற்றைக் காட்டுயானையால் அடித்துக் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் தந்தையும் மகனும் உடைந்த கொம்பு சங்கரால் கொல்லப்பட்ட நிலையில், அந்த யானையைப் பிடிக்கக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததையடுத்து அதனைப் பிடிக்க வனத்துறை சார்பில் தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் தொடங்கிய யானையைப் பிடிக்கும் பணி, தற்பொழுது வரை நீடிக்கிறது. புதன் கிழமை காலை நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியில் உள்ள புதர் ஒன்றில் உடைந்த கொம்பு சங்கரை வனத்துறையினர் கண்டறிந்தனர். ஆனால், அந்த யானையுடன் 12 யானைகள் இருந்ததால், அந்தக் குறிப்பிட்ட ஒரு யானைக்கு மட்டும் மயக்க ஊசி செலுத்துவது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் தொடர் முயற்சியால் முதல் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதேபோல், இரண்டாம் முறை மயக்க ஊசியைச் செலுத்த முயன்றபோது, சுற்றியிருந்த யானைகள் உடைந்த கொம்பனைச் சுற்றி பாதுகாப்பு சுவர்போல நின்றதால் அது முடியாமல் போனது.
மேலும், அந்த யானை மறைந்துள்ள பகுதி சமதளப் பகுதியாக இல்லாமல் மேடு பள்ளங்கள் நிறைந்த புதர்ப் பகுதியாக இருந்ததால் யானை மயக்கமடைந்தாலும், அதனை வாகனத்தில் ஏற்றுவது மிகவும் சவாலான காரியம் எனக் கூறிய வனத்துறையினர், யானை முழுமையாக மயக்கமடைவதற்கு முன், அதனைச் சமதளப் பகுதிக்குக் கொண்டுவர முயற்சி செய்தனர். அதேபோல் யானையை வண்டியில் ஏற்ற, கும்கி யானையும் கொண்டுவரப்பட்டது. ஆனால் இறுதிவரையில் போராடியும் உடைந்த கொம்பனை கூட்டத்தில் இருந்து பிரிக்கமுடியவில்லை. இதனால் யானையைப் பிடிப்பதற்கான வனத்துறையின் திட்டம் அன்று மாலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று அந்த யானை நீலகிரி கூடலூர் வனப்பகுதிக்குள் ஊடுருவியது. அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதால் யானையை முதல் முறையாக ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர். அப்பொழுதும் உடைந்த கொம்பனை சுற்றி 10 யானைகள் இருந்தது. உடைந்த கொம்பனை கண்காணிக்க கோவை முதுமலையிலிருந்து ட்ரோன் கேமராக்கள் கொண்டுவரப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு யானை வேறு இடத்திற்கு நகர்ந்து சென்றுவிட்டது.
தற்பொழுது டிமிக்கி கொடுத்த உடைந்த கொம்பன் எங்கு உள்ளான் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ள வனத்துறை, யானையின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே அதனைப் பிடிப்பதற்கான அடுத்த முயற்சி தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும் மீண்டும் அதேபகுதிக்கு யானை வரலாம் என்பதால், சமவெளி அல்லாத அந்த புதர் மிகுந்த வனப்பகுதியில், தானியங்கி கேமராக்களையும் வனத்துறையினர் பொருத்தி வருகின்றனர். அதேபோல் கைவிடப்படாமல் ட்ரோனும் அலசி வருகிறது உடைந்த கொம்பு சங்கரை.