தெ.சு.கவுதமன்
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்தே, முகாம்களில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, யூ.என்.ஹெச்.சி.ஆர், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சென்னை சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து, 'திறன்களின் சங்கமம்' என்ற வேலைவாய்ப்பு முகாம் மற்றும் விளையாட்டுத்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை, கடந்த சனிக்கிழமை (25.6.22) சென்னை எழும்பூரில் நடத்தியது. வெளிநாடுவாழ் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வெளிநாடுவாழ் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
வேலைவாய்ப்பு, விளையாட்டுத்துறை, கல்வி மற்றும் இலக்கியம் ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்துவிளங்கும் மறுவாழ்வு முகாம் மக்களுக்கு ஏற்ற வாய்ப்புகளைப் பெருக்கிடவும், தகுந்த ஆலோசனை வழங்கி அவர்களை வழிநடத்திடவும் புதிய முயற்சியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மறுவாழ்வு முகாம்களில் வசித்துவரும் இலங்கைத்தமிழர்களில் பெரும்பாலானோர், பெயின்டர், எலக்ட்ரீஷியன் போன்ற சிறுசிறு வேலைவாய்ப்புகளை மட்டுமே பெற்றுவருகிறார்கள். அவர்களில் தகுதிவாய்ந்தவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பணிவாய்ப்பினைப் பெறுவதற்கு ஓர் வாய்ப்பாக இந்த 'திறன்களின் சங்கமம்' நிகழ்ச்சி அமைந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழகத்திலுள்ள 72 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களிலிருந்து பலரும் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்ச்சியில், சீக்கெம், பஹ்வான் சைபர்டெக், ப்ரூடில், கெவின்கேர், கிரீன்ட்ரென்ட்ஸ், டீம்லீஸ், ஸ்போர்ட்ஸ் மெக்கானிக்ஸ், தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் ஆகிய 8 நிறுவனங்கள் பங்கெடுத்து, தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல்களை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேர்வு பெற்ற 14 பேரில் 6 பேருக்கு அன்றைய தினமே கெவின்கேர் நிறுவனத்தில் வேலை உறுதிசெய்யப்பட்டது. மேலும் 37 பேர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சிபெற்று அடுத்தகட்ட நேர்காணலில் வேலைவாய்ப்பைப் பெறவுள்ளனர்.
இந்த முகாமில், வேலைவாய்ப்பு வழங்குவதோடு மட்டுமல்லாமல். விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு அத்துறையின் வல்லுநர்களைக்கொண்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அவர்களின் வெற்றியை மேலும் தொடர அடுத்தகட்டமாக என்னென்ன செய்ய வேண்டும், உடல்திறனைப் பேணுவதற்கு என்னமாதிரியான டயட் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.கலைத்துறையில் சாதித்த இலங்கைத் தமிழர்களை அழைத்துவந்து, அவர்கள்மூலமாக கலை நிகழ்ச்சிகளை நடத்தவைத்து அவர்களின் திறனைப் பலரும் அறியும்படி செய்தார்கள். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, தகுதிக்கேற்ற வேலையைப் பெற்றுத்தர வேண்டுமென்றும், அதன்மூலம் முகாம்களில் வசிக்கும் மற்ற இளைஞர்களும் நல்ல உத்வேகத்தைப் பெறுவார்கள் என்றும் துறை ஆணையர் தெரிவித்தார்.