Skip to main content

ஒரே மேடையில் மூன்று சகோதரிகளின் நூல்கள்! தமிழ்ப் பதிப்பக வரலாற்றில் சாதனை

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

 

தமிழ்ப் பதிப்பக வரலாற்றில் சாதனை நிகழ்வாக ஒரே மேடையில் மூன்று சகோதரிகளின் நூல்கள் காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளியில் 23.11.2019 அன்று  இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக வெளியிடப்பட்டது.

 

b


முனைவர். சுவேதா, பா.தென்றல், பா.லெட்சுமி மூவரும் உடன் பிறந்த சகோதரிகள். கலை இலக்கியத் தளத்திலும் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மூவரும் முதல் முறையாக எழுதிய இலக்கிய "ஆளுமையில் சொல்வேந்தர்" (ஜீ.சுவேதா), "உயிர் பருகும் மழை" (பா.தென்றல்), "மழையில் நனையும் வெயில்" ( பா.லெட்சுமி) ஆகிய மூன்று நூல்களையும் அவர்களது பெற்றோர் ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளி மேனாள் செயலர் வே.பாலசுப்பிரமணின், அவரது துணைவியார் கோ.ஆனந்தா ஆகியோர் வெளியிட்டு முன்னிலை வகிக்க,முனைவர் ரெ.சந்திரமோகன், தமுஎகச மாவட்டத் தலைவர் ஜீவசிந்தன், ஆசிரியர் பா.சரவணன் மூவரும் முதல் பிரதிகள் பெற்றுக் கொண்டனர்.  

 

b

 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மதிப்புறு கர்னல் பேராசியர் நா.இராஜேந்திரன் தலைமை வகித்து, நினைவுப் பரிசுகள் வழங்கி, தலைமையுரையாற்றிய பொழுது, "தான் இந்த இடத்தை அடைவதற்குப் படிக்கட்டுகளாக இருந்தவை நூல்களே. துணிக்கடை, நகைக்கடை திறப்பு விழாவிற்கு என்னை அழைக்காதீர்கள். புத்தகக்கடை, புத்தகக் கண்காட்சி அல்லது பள்ளிக்கு அழைத்தால், அதுவும் அரசுப் பள்ளிக்கு எனில், மகிழ்ச்சியாக வருகிறேன். எழுதுவது என்பது மிகக் கடினமே. .அதுவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் படைப்பாளிகளாக இருப்பது மிகவும் அரிதானது, அது அதிசயம் " என்றார். ஒவ்வொரு நூலையும் முழுமையாகப் படித்து, நூலாசிரியர்கள் குறிப்புகளையும் சொல்லி, கருத்துகள், கவிதைகள் குறித்தும் மிகவும் சிறப்பாகப் பேசினார்.

 

இந்நிகழ்வில்  இந்து தமிழ் முதுநிலை உதவி ஆசிரியர் கவிஞர் மு.முருகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, "தனது வாழ்க்கையையே இனிய நந்தவனம் என்ற ஒரு புத்தகத்துக்குள் அடைகாத்துக் கொண்டிருக்கிற இனிய மனிதரது பதிப்பக வெளியீட்டில் மிகச் சிறப்பான வடிவமைப்புடன் மூன்று நூல்களும் வெளிவந்திருக்கின்றன. நான் பார்த்தவரையில் அதிகப் பெண்கள் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழா இதுதான்.

 

இலக்கியம் ஒன்று தான் மனித வாழ்வை இன்னும் ஈரமாக வைத்திருக்கின்றது. ஒரு பெண் எழுதுவது 100 ஆண்கள் எழுதுவதற்குச் சமம். நுட்பமாக மொழியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் தமிழ்ச் சமூகத்தில் பெண்ணெழுத்து இன்றும் குறைவாகவே இருக்கிறது. ஒரு பெண் எழுதிய கவிதையை அவள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கிறார்கள். பெண் எழுதிய கவிதையைப் பெண்ணின் அனுபவமாகப் பார்க்காதீர்கள்" என்று கவிதைகள் குறித்தும், பெண்ணைழுத்து மீது சமூகப் பார்வை குறித்தும் சிறப்புரையாற்றினார்.

 

நாளந்தா புத்தகக்கடை உரிமையாளர் செம்புலிங்கம் வாழ்த்துரை வழங்க, முனைவர் க.சுமதி, முனைவர் இரா.வனிதா, எழுத்தாளர் ம.ஜெயமேரி ஆகியோர் நூல்கள் குறித்து ஆய்வுரை வழங்கினர். முன்னதாக, ஆசிரியர் பா.முத்து வள்ளி அனைவரையும் வரவேற்க, நூலாசிரியர்கள் மூவரும் ஏற்புரையாகத் தங்கள் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவாக ஆசிரியர் பா.சரஸ்வதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் . பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் நிகழ்வைத் தொகுத்து வழங்கிச் சிறப்பாக வழிநடத்தினார்.

- இலக்கியன்

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழக அரசு சார்பில் கத்தார் தமிழர் சங்கத்திற்கு பாடப்புத்தகம் வழங்கல்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
TN Govt to provide textbooks to the Qatar Tamil Society

கத்தார் தமிழர் சங்கத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் தமிழ் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான 5 ஆயிரத்து 450 தமிழ் பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (13.03.2024) கத்தார் தமிழர் சங்கத்திற்கு வழங்கினார். இப்புத்தகங்களை கத்தார் தமிழர் சங்க நிர்வாகிகளான லட்சுமி மோகன் (ஒருங்கிணைப்பாளர்), அடிலாஸ் மகேந்திரன், செந்தில் (வளைகுடா தமிழ்ச்சங்கம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் கஜலட்சுமி மற்றும் இணை இயக்குநர் சங்கர சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story

“பாடப் புத்தகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு” - கர்நாடக அரசு

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
“Biography of Father Periyar in Text Book” - Government of Karnataka

கர்நாடகாவில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசு கடந்த 2022 - 2023 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களின் வரலாறு புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் பலராம் ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றிருந்தன. அதே சமயம் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், கேரளாவைச் சேர்ந்த நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகியோர் குறித்த தகவல்களும், சமுதாய முன்னேற்றத்துக்கான இலக்கியங்களைப் படைத்த எழுத்தாளர்களின் கதை மற்றும் கவிதைகளும் நீக்கப்பட்டன. இந்த செயல் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி அரசுக்கு அளித்த பரிந்துரையின் படி 2024 - 2025 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களை கர்நாடக காங்கிரஸ் அரசு மாற்றம் செய்துள்ளது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில், கர்நாடகத்தில் உள்ள கன்னட மொழிப் பாடங்களில் முற்போக்கு தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 10 ஆம் வகுப்பு வரலாறு பாடத் திட்டத்தில், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, சமூகப் பணிகள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சாவித்ரிபாய் பூலே, திப்பு சுல்தான், பசவண்ணர், விஸ்வேவரய்யா ஆகியோரின் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளன.