Skip to main content

‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சிபிஎம் கட்சியின் ஆதரவு யாருக்கு?’ - வெளியான தகவல்!

Published on 07/01/2025 | Edited on 07/01/2025

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதிய நிர்வாகிகள் மற்றும் புதிய மாநிலக் குழு, மாநில செயற்குழு, புதிய மாநிலச் செயலாளர் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய மாநிலச் செயலாளராக, பெ.சண்முகம்  தேர்வு செய்யப்பட்டார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகப் பதவி வகித்து வந்தவர் ஆவார். அதோடு, மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்துள்ளார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பு, விவசாயச் சங்க மாநிலச் செயலாளராகவும் பெ.சண்முகம் பதவி வகித்துள்ளார்.

மாநிலச் செயலாளராக இருந்த கே.பாலகிருஷ்ணனின் பதவிக் காலம் நிறைவடைந்ததையொட்டி, பெ.சண்முகம் அடுத்த மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிப்படி மாநிலச் செயலாளர் வயது 72 வயத்துக்குள் இருக்க வேண்டும். கே.பாலகிருஷ்ணன் 71 வயதைக் கடந்த நிலையில் புதிய மாநிலச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகச் சண்முகம் இன்று (07.01.2025) பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாலை 04.00 மணியளவில் அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் யார் நின்றாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும்” எனத் தெரிவித்தார். முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்