பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் ரவுடிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கையானது இன்று (03.10.2024) தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக இந்த கொலை தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டு அதில் 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றப்பத்திரிக்கையின் படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரனும், ஏ2 குற்றவாளியாக சம்போ செந்திலும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ள குற்றப்பத்திரிகையில் இருந்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், “ஆம்ஸ்ட்ராங்கின் வளர்ச்சியைத் தடுக்கவே இந்த கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் அசுர வளர்ச்சியே கொலைக்குத் தூண்ட முக்கிய காரணமாக உள்ளது. அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக வளர்ந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை ஒடுக்கவே கொலை செய்யப்பட்டார். இதற்காக 6 மாதங்கள் திட்டமிட்டு ‘ரெக்கி ஆப்ரேஷன்’ நடத்தி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு மொத்தமாக ரூ.10 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் தகவல். அதோடு அஸ்வதாமன், சம்போ செந்தில், ரவுடி ஆற்காடு சுரேஷ் ஆகியோருடனான முன்விரோதங்களும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணமாக உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.