Skip to main content

ஒரு ஒன்றியத்தில் மட்டும் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு! 

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

Indirect election postponement in ranipet district nemili union

 

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்துமுடிந்து கடந்த 20ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். நெமிலி ஒன்றியத்தில் 19 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக 8, அதிமுக 4, பாமக 5, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், அக்டோபர் 22ஆம் தேதி (இன்று) தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

 

இதற்கான அறிவிப்பில் தலைவர் பதவி பட்டியலினத்தவர் / பழங்குடியினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. காரணம், தேர்தலுக்கு முன்பு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பதவி பொதுப்பிரிவில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகளும் அதற்கு தகுந்தாற்போலவே வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.

 

தேர்தல் முடிந்தபின் அது எப்படி எந்த அறிவிப்பும் இல்லாமல் தலைவர் பதவியைப் பட்டியலினம் / பழங்குடியினம் என அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த மனோகரன் என்கிற கவுன்சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் கேள்வி எழுப்பியதும், தவறு நடந்துவிட்டது என தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்டது. அடுத்த 7 நாட்களுக்குள் அறிவிப்பு செய்து மறைமுக தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதி தேர்தல் என அறிவித்துள்ளார் நெமிலி ஒன்றிய தேர்தல் அதிகாரி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

Next Story

“ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு” - டாடா நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Investment of Rs.9 thousand crores TN Govt Agreement with Tata Company

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காகத் தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும், அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக் கூடிய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், பெருமளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ. 6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (13.3.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

அதாவது தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான வே. விஷ்ணு, டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பாலாஜி ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான தொழிற்சாலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் வி. அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குநர் கி. செந்தில்ராஜ் மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.