சேலம் மாவட்டத்தில் 3 ஒன்றியம் மற்றும் 6 ஊராட்சி மன்றங்களில் காலியாக உள்ள துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நாளை மறுநாள் (22.10.2021) நடக்கிறது.
சேலம் மாவட்டத்தில் காலியாக இருந்த மாவட்ட ஊராட்சிக்குழு 10வது வார்டு உறுப்பினர், பனமரத்துப்பட்டி ஒன்றியம் 9வது வார்டு உறுப்பினர், 10 ஊராட்சி மன்றத் தலைவர், 12 கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர் என மொத்தம் 24 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அக். 9ஆம் தேதி நடந்தது. தேர்தல் முடிவுகள் அக். 12ஆம் தேதி வெளியாயின.
இதையடுத்து, காலியாக உள்ள ஊராட்சி மன்றத் துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை (அக்.22ம் தேதி), மதியம் 2.30 மணிக்கு நடக்கிறது. அந்தந்த ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் மறைமுகமாக வாக்களித்து, துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
இதேபோல், தாசநாயக்கன்பட்டி, தென்னப்பிள்ளையூர், வீராட்சிபாளையம், செட்டிமாங்குறிச்சி, நல்லாக்கவுண்டம்பட்டி, மாரமங்கலம் ஆகிய 6 ஊராட்சி மன்றங்களில் துணைத்தலைவருக்கான மறைமுகத் தேர்தல் அக். 22ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.
அந்தந்த ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் வாக்களித்து துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். மறைமுகத் தேர்தலையொட்டி, ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.