Skip to main content

"உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை உடனே மீட்க வேண்டும்"- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

"Indians stranded in Ukraine must be rescued immediately" - BJP Founder Ramadas insists!

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (15/02/2022) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது ரஷ்யா எந்த நிமிடமும் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் இரு நாட்டு எல்லையில், குறிப்பாக உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைன் நாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மருத்துவம் பயின்று வரும் நிலையில், அவர்களின் நிலை என்னவாகும் என்ற கவலை அதிகரித்துள்ளது.

 

ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா சோசலிசக் குடியரசின் அங்கமாக ஒரு காலத்தில் இருந்து, இப்போது தனித்தனி நாடுகளாக உள்ள ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி வந்தாலும் கூட, உக்ரைனைச் சுற்றியுள்ள தமது எல்லையிலும், உக்ரைன் நாட்டில் ஆக்கிரமித்து வைத்துள்ள கிரிமியா பிராந்தியத்திலும், முப்படைகளையும் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் கூடுதலான படைகளையும், போர் விமானங்களையும் ரஷ்யா நிறுத்தி வைத்திருக்கிறது. தங்கள் நாட்டின் மீது ரஷ்யா நாளை போர் தொடுக்கக்கூடும் என்று  உக்ரைன் அதிபர் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், எந்த நேரமும் போர் வெடிக்கும் ஆபத்து உள்ளது.

 

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், இங்கிலாந்து உள்ளிட்ட இருபதுக்கும் கூடுதலான நாடுகள்,  உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி கேட்டுக் கொண்டிருக்கின்றன. உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இன்று தான் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது சரியான  வழிகாட்டுதல் தான் என்றாலும், அங்குள்ள இந்தியர்கள் எவ்வாறு வெளியேறுவர் என்பது தெரியவில்லை. குறிப்பாக உக்ரைன்- ரஷ்யா பதற்றம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியர்கள் தாயகம் திரும்ப இது தடையாக உள்ளது.

 

உக்ரைன் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். அவர்கள் தவிர வணிகம் செய்வது உள்ளிட்ட காரணங்களுக்காக சுமார் 5000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். உக்ரைனில் வாழும் சுமார் 25 ஆயிரம் இந்தியர்களில்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் பெரும்பான்மையினர் மாணவர்கள் என்பதாலும் அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் உக்ரைன் நாட்டுக்கு முற்றிலும் புதியவர்கள் என்பதால், அவர்களுக்கு அடுத்து என்ன செய்வது? என்பது தெரியவில்லை.

 

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் அந்த இரு நாடுகளுடன் மட்டும் நின்று விட்டால், அதிகபட்சம் 72 மணி நேரத்திற்குள் போர் முடிவடைந்து விடும். ஆனால், நேட்டோ நாடுகள் (North Atlantic Treaty Organization - NATO)) உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டால், இந்தப் போர் வாரக்கணக்கில் நீடிக்கும் ஆபத்து இருப்பதாக அஞ்சப்படுகிறது. அத்தகைய நிலை ஏற்பட்டால் உக்ரைனுக்கும், அந்த நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் மிக அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதைக் கருத்தில் கொண்டு அங்குள்ள இந்தியர்கள் அனைவரையும் வெளியேற்றுவது தான் சரியான செயலாக இருக்கும்.

 

கடந்த 2014- ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிரிமியா பகுதியைக் கைப்பற்றிய போது, அங்கு தவித்த 1000 இந்தியர்களை மத்திய அரசு தொடர்வண்டிகள் மூலம் உக்ரைன் தலைநகர் கியேவுக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், இப்போது கியேவ் நகரமே தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதால், இந்தியர்கள் அனைவரையும் உக்ரைனிலிருந்து வெளியேற்றுவதே சரியாக இருக்கும்.

 

எனவே, உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அவர்களாகவே அந்த நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுரை வழங்குவதுடன் நின்று விடாமல், இந்திய அரசே அவர்களை மீட்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் லிபியா மற்றும் ஆப்கானிஸ்தாலிருந்து இந்தியர்களை மீட்டது போல உக்ரைனில் உள்ள இந்தியர்களையும் இந்திய விமானப்படை விமானங்களை அனுப்பி மீட்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.