Skip to main content

இந்தியன் 2 பட விவகாரம்: மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

indian 2 film chennai high court order


இந்தியன் 2 பட விவகாரத்தில், லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடிகர் கமல் நடிப்பில் இந்தியன்- 2 திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

 

இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

படத்திற்கு முதலில் 150 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இயக்குனர் சங்கருக்கு ஏற்கனவே ஷங்கருக்கு 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீத தொகையை வழங்கவும் தயாராக இருப்பதாகவும், கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

 

வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், முதலில் இந்த படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்ததாகவும், ஆனால், அவரை சமாதானப்படுத்தி, படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் தானே முன் வந்ததாகவும் குறிப்பிடிருந்தார்.

 

படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியதாகவும், அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தியதாகவும் லைகா மீது புகார் தெரிவித்திருந்தார்.

 

தில்ராஜு படத்தை தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும் எனவும், லைகா சார்பில் படப்பிடிப்புக்கு அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாகவும், இதற்கிடையில் நடிகர் கமலுக்கு ஏற்பட்ட மேக் அப் அலர்ஜி, இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை வீண்டித்தது லைகா நிறுவனம் தான் எனவும், பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தான் பொறுப்பல்ல எனவும், வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் துவங்க தயாராக இருப்பதாகவும், வரும் அக்டோபர் மாதத்திற்குள் படத்தை முடித்து கொடுக்க தயார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த வழக்கில், லைகா தரப்பும், இயக்குனர் சங்கர் தரப்பும்,  தாங்களே சமரசம் செய்து கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியத நிலையில், இரு தரப்பினரும் தங்களுக்குள்ளாக சமரசம் செய்ய முயற்சித்து அந்த முயற்சி தோல்வி அடைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

 

இந்த வழக்கு இன்று (30/06/2021) மீண்டும் நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என இடைக்கால நிவாரணம் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை  தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

 

அதே சமயம், இந்தியன் 2 பட விவகாரத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமனம் செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கே.ஜி.எஃப் ஓனர்...’ - கேம் சேஞ்சரில் ராம் சரண் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
shankar ram charan game changer Jaragandi lyric video released

இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து 'இந்தியன் 2' மற்றும் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' என இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. ஆந்திராவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. 

கடந்த செப்டம்பர் மாதம், படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. அது வைரலாகப் பரவ அதிர்ச்சியடைந்த படக்குழு, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது. புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பாடலை லீக் செய்த நபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இரண்டு நபர்களைக் கைது செய்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்பு வெளியாகவில்லை. 

இந்த நிலையில், 'ஜரகண்டி' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இன்று ராம் சரணின் பிரந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகப் படக்குழு இப்பாடலை வெளியிட்டுள்ளது. மேலும் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரையும் பகிர்ந்துள்ளது. இப்பாடல், ஷங்கர் படத்தில் வழக்கம் போல் இடம்பெறும் காதல் குத்து பாடலாக அமைந்துள்ளது. மேலும் பிரம்மாண்டமாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஹீரோ ஹீரோயின் இருவருக்கும் இடையில் காதலை விவரிக்கும் விதமாக அமைந்துள்ள இப்பாடலை தலேர் மெஹந்தி மற்றும் பூஜா வெங்கட் ஆகியோர் பாடியுள்ளனர். முதலில் தெலுங்கு பதிப்பு வெளியானதை அடுத்து தற்போது தமிழ் பதிப்பு வெளியாகியுள்ளது. அடுத்ததாக இந்தி பதிப்பும் வெளியாகவுள்ளது. 

தமிழ் பதிப்பிற்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார். ஆங்கிலமும் தமிழும் கலந்து அதிக வரிகள் இடம் பெற்றுள்ளன. ‘வெள்ளை தங்கம் கே.ஜி.எஃப் ஓனர் நான்டி..., சிஸ்டம் சறுக்குனா மொறப்பான்டி, தண்டர் ஸ்டார்ம போல் டிண்டர் சீமையில் சொழண்டது வேற யாருடி...’ போன்ற வரிகள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.