உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரத்தில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி நடத்தப்பட உள்ளதாக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருக்கும் கணக்கம்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் வரவேற்றார். எம்.பி.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். விழாவில் 2,028 பயனாளிகளுக்கு 5.82 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, ''திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரத்தில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அகில இந்திய அளவிலான ஏ கிரேடு கபடி போட்டி நடக்க உள்ளது. இப்போட்டியில் ப்ரோ கபடி மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆண் பெண் என இரு பிரிவாக போட்டி நடத்தப்பட உள்ளது. ஆண்கள் பிரிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே தலா 20 லட்சம், 15 லட்சம், 7.5 லட்சம், 7.5 லட்சம் என பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
அதுபோல் பெண்கள் அணிகளுக்கு முறையே 15 லட்சம், 10 லட்சம் மற்றும் 5 லட்சம், 5 லட்சம் என வழங்கப்பட உள்ளது. மேலும் ஆண்கள் பிரிவில் சிறந்த மூன்று வீரர்களுக்கும், பெண்கள் பிரிவில் சிறந்த மூன்று வீராங்கனைகளுக்கும் கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன. போட்டியில் இறுதிவரை வந்து வெற்றி வாய்ப்பை இழக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா நான்கு அணிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.'' என்று கூறினார்.