Skip to main content

இந்தியாவிலேயே தலைசிறந்த கூட்டுறவு கல்லூரி இங்குதான் உருவாகிறது - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

india greatest cooperative college  i periyasamy

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமை தாங்கினார். விழாவில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.

 

விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, "தமிழக முதல்வர் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அந்த திட்டங்களின் பயன்கள் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில்,செயல்பட்டு வருகிறார். கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

 

தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் புதிதாக அரசுக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசுக் கல்லூரிகளில் கட்டணம் மிகவும் குறைவுதான். திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்காக புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் ஓராண்டில் உயர் கல்வி மேம்பாட்டிற்காக 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும்,  பழனியில் ஒரு சித்த மருத்துவக்கல்லூரி, கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு பயிற்சி மையம் என 6 கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறப்பட்டு, கல்லூரிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

 

ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு ஊராட்சியில் உள்ள சுதநாயகிபுரத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதே போல், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார் சத்திரத்தில் உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிக்கும்  விரைவில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

 

கிராமப் பகுதிகள் சூழ்ந்த பின்தங்கிய பகுதியில் தற்போது அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதி மாணவர்கள் உயர்கல்வி பெற சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளது. எளிய மக்கள், விவசாயிகளின் குழந்தைகள் உயர்கல்வி பெற வேண்டும், நிதி பற்றாக்குறையால் அவர்களின் கல்லூரி கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே இந்த அரசின் லட்சியம். தேவைக்கேற்ப இன்னும் பல கல்லூரிகள் தொடங்கப்படும். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் விரைவில் 100 படுக்கைகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்பட உள்ளன.

 

முதல்வர், கூட்டுறவுத்துறையில் ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தியுள்ளார். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவுத்துறையில் யூரியா, டிஏபி, பொட்டாஷ் போன்ற உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

கூட்டுறவு கடன் அதிகளவில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூ.10,000 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில்  தற்போதுவரை ரூ.8,300 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 3 மாத காலத்திற்குள் கடந்த ஆண்டை விடக் கூடுதலாகக் கடன் உதவிகள் வழங்கப்படும். கூட்டுறவுத்துறையில் 6,500 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. வெளிப்படைத்தன்மையுடன் இந்தப் பணி நியமனம் நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் உறுதுணையாக இருப்பேன். இங்கு அமையப்போகும் இந்தக் கூட்டுறவு கல்லூரி இந்தியாவில் தலைசிறந்த கூட்டுறவு கல்லூரியாக உருவாகப் போகிறது" என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

தேனியில் வேட்புமனு தாக்கல் செய்த தங்க தமிழ்செல்வனுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி வாழ்த்து

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I. Periyasamy congratulated Thanga Tamilselvan who filed his nomination

தேனி பாராளுமன்றத் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளர் நாராயணசாமி மற்றும் பிஜேபி கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் உள்பட சில சுயேச்சைகளும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான், போடி உள்பட ஆறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கட்சிக்காரர்களும் பெருந்திரளாக தேனி பழைய பேருந்து நிலையத்துக்கு வந்தனர். அப்பொழுது வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுடன்  அமைச்சர்களான ஐ. பெரியசாமி மற்றும் மூர்த்தி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் வந்தனர். அவர்களை மக்கள் மலர் தூவியும் வாழ்த்தியும் மேளதாளத்துடன்  வரவேற்றனர்.

Minister I. Periyasamy congratulated Thanga Tamilselvan who filed his nomination

அதைத் தொடர்ந்து தேனி ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் சஜிவனாவிடம் தனது வேட்பு மனுவை அமைச்சர்களான ஐ. பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மனுத்தாக்கல் செய்தார். அதன்பின் வெளியே வந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பட்டு வேஷ்டி போத்தி வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் சிலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.