Skip to main content

சுதந்திர தின விழா; பல்வேறு விருதுகளை வழங்கிய முதல்வர்

Published on 15/08/2023 | Edited on 15/08/2023

 

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டைக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை 3வது முறையாக ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

 

அதனைத் தொடர்ந்து பல்வேறு விருதுகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அந்த வகையில், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதுடன், 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதல்வர் வழங்கினார். அப்துல் கலாம் விருதுக்கான தங்கப் பதக்கம், காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கணினித் துறை பேராசிரியர் முனைவர் டபிள்யூ. பி. வசந்தா கந்தசாமிக்கு வழங்கினார்.

 

எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைச் சேர்த்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ் செல்விக்கு துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.  மாற்றுத் திறனாளிகளுக்குச் சேவை புரிந்த சிறந்த நிறுவனத்திற்கான தமிழ்நாடு அரசு விருதினை கன்னியாகுமரி சாந்தி நிலையத்திற்கு வழங்கினார். முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் கண்காணிப்பு செல்லிட செயலியை உருவாக்கிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருதினை வழங்கிடும் வகையில் மின் ஆளுமை முகமையின் இணை இயக்குநர் பெ. ரமண சரஸ்வதியிடம் வழங்கினார்.

 

சிறந்த மாநகராட்சிக்கான விருதை திருச்சி மாநகராட்சிக்கு வழங்கினார். 50 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையை திருச்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் பெற்றுக்கொண்டனர். இதேபோன்று பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருதுகளும் பதக்கங்களும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Chief Minister M.K. Stalin's letter

இலங்கைக் கடற்படையினரால் கடந்த 9 ஆம் தேதி (09.12.2023) தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோல தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (11-12-2023) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,  “IND-TN-06-MM- 7675 பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும், IND-PY-PK-MM-1499 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்களும், 9-12-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அதோடு, IND-TN-10-MM-558 என்ற பதிவெண் கொண்ட மற்றொரு மீன்பிடிப் படகு இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பலால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது, நமது மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

‘பள்ளிகளின் தூய்மைப் பணிக்காக ரூ1.90 கோடி ஒதுக்கீடு’ - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 10/12/2023 | Edited on 11/12/2023
'Allotment of Rs 1.90 crore for cleaning work of schools' - Chief Minister M. K. Stalin

மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 04.12.2023 முதல் 09.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  உத்தரவுப்படி 'மிக்ஜாம்' புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, நாளை (11.12.2023) பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த பணிகளைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 இலட்சம் ரூபாயும், ஆக மொத்தம் ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க நாளை (11.12.2023) மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து (12.12.2023) அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.