Skip to main content

“பொருளாதாரத்தை தேடி மக்கள் இடம்பெயர்வது அதிகரிப்பு” - அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர்  

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
“Increasing migration of people in search of economics says Annamalai University Vc

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மக்கள் இயல் துறை மற்றும் இந்திய மக்கள் தொகை ஆய்வு சங்கம் இணைந்து, தென்னிந்திய மக்கள் தொகை வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் தென் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் மாநாட்டு மலரை வெளியிட்டு மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், தாவரங்களின் நடத்தைக்கும் மனிதனின் நடத்தைக்கும் இடையில் உள்ள ஒப்பீடுகளைக் கூறினார். மேலும் சிறந்த பொருளாதாரத்தை தேடி மக்கள் இடம் பெயர்வது அதிகரிக்கிறது என்றார்.  

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சஜ்ஜன்சிங் சவான், ஐ.ஏ.எஸ், உணவு மற்றும் நீர் வரையறுக்கப்பட்ட வளங்களில் உள்ள சவால்கள், தொழிற்சாலைகள், கார்ப்பரேஷன் போன்றவற்றால் விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது எனப் பேசினார். 

மக்களியல் துறைத்தலைவர் மற்றும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர், அனைவரையும் வரவேற்றார். இதைத் தொடர்ந்து இந்திய மக்களியல் துறை கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் சர்மா தலைமை உரையாற்றினார். கூட்டமைப்பின் தெற்குப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அனில்சந்திரன், பொதுச் செயலாளரான உஷா ராம் வாழ்த்துரை வழங்கினார்கள்.  விழாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆய்வு மாதிரி குறு தரவு குறித்த ஆராய்ச்சிக்கான பணிக்கூடத்தை அமைப்பதற்கு தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.    

மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டுக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் நடத்திய விவாதப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று பிரிவுக்கான ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மக்கள் தொகை ஆராய்ச்சி மையங்களில் ஆராய்ச்சியாளர்கள் சமூக விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றனர். பல்வேறு மக்கள் தொகை தலைப்புகளை உள்ளடக்கிய 54 ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் 26 சுவரொட்டி விளக்கக் காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதில் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்விக்கான மைய இயக்குநர், புலமுதல்வர்கள், துறைத் தலைவர்கள், இயக்குநர்கள், இணை, துணை இயக்குநர்கள், ஆசிரியர்கள், துணைவேந்தரின் நேர்முகச் செயலர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்’ - ஊழியர்கள் கோரிக்கை

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
Salary demand for employees in Annamalai University

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தமிழக அரசு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள் தமிழக அரசின் உயர்கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பணி நிறவல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாத முதல் தேதி அல்லது அதற்கு முதல் நாளே ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் மே 6 ஆம் தேதி கடந்தும் வழங்கவில்லை எனவும் உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அனைத்து  ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழக கிளையின் இணைப் பொதுச் செயலாளர் காந்தி பல்கலைக்கழக பதிவாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் மாத ஊதியத்தை விரைவாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இது குறித்து பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத்திடம் கேட்டபோது தலைமை செயலகத்தில் ஊதியம் வழங்குவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் விரைவில் ஊதியம் வழங்கப்படும் என்றார்.

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.