![Increase in water opening in Chembarambakkam Lake](http://image.nakkheeran.in/cdn/farfuture/7TQz7wNv1ex4Xe2JwoPKuNptCtEc7ULmh2zN7U3Cjcg/1701675215/sites/default/files/inline-images/a3493_0.jpg)
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 'மிக்ஜாம்' புயல், புயல் என்ற நிலையில் இருந்து தீவிரப் புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நேமம் ஏரி, பிள்ளைப் பாக்கம் ஏரி நிரம்பியதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து பத்தாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 3,000 கனஅடியில் இருந்து 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரி மொத்தமுள்ள 24 அடியில் 21.77 அடி நிரம்பியுள்ளது.