காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் (14.07.2024) அனைத்து கட்சி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “காவிரியில் நீர் இருப்பின் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில் கொண்டு கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து ஜூலை 15 ஆம் தேதி முதல் 8 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்திற்குத் திறக்க முடியாது. இந்த மாதம் இறுதிவரை தினமும் ஒரு டிஎம்சி என மொத்தமாக 20 டிஎம்சி நீர் திறக்க வேண்டுமெனக் காவிரி ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் ஜூலை 12 முதல் 31 வரை தினமும் 1 டிஎம்சி (11 ஆயிரத்து 500 கன அடி) தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவைக் கர்நாடக அரசு ஏற்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (16.07.2024) காலை 11.00 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக பிலிகுண்டிலுவிற்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது. அதன்படி காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியில் இருந்து 18 ஆயிர கன அடியாக அதிகரித்துள்ளது. வெளிக்கொண்டு வைக்க வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியில் இருந்து 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்து அதிகரித்துள்ளது. பிலிகுண்டுலுவிற்கு நேற்று (15.07.2024) இரவு 15 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இன்று (16.07.2024) காலையில் இருந்து 18 ஆயிரம் கன அடியாக நீர் கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளதால் கர்நாடகாவில் இருந்து காவேரி ஆற்றில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 82 அடி அளவிற்கு நீர்மட்டம் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி முதல் 25 ஆயிரம் கன அடி வரை நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இரு அணைகளிலும் இருந்து மொத்தமாக நேற்று காலை வரை வினாடிக்கு 21 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 25 ஆயிரம் கன அடியாகத் திறக்கப்பட்டு வருகிறது.