2023 - 2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்பில் துறைநிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் கோயில் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4, ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த பணியாளர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுதாரருக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் குடும்ப மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் குடும்ப ஓய்வூதியம் ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4 ஆயிரம் மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் ஓய்வுபெற்ற தொகையான ரூ.2 ஆயிரம் ஆகியவற்றிற்கான காசோலைகளை கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2 ஆயிரத்து 454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய செயலாளர், அறநிலையத்துறை ஆணையாளர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர் அ.சங்கர் என பலரும் கலந்து கொண்டனர்.