நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சேலம் மாவட்டம் தாரமங்கலம் அ.தி.மு.க. நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம் என்பவரின் வீடு மற்றும் நகைக் கடையில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது ரூ. 50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலசுப்பிரமணியத்தின் வீட்டில் இருந்து தங்கக் கட்டிகள் மற்றும் ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதே சமயம் சேலத்தின் முக்கிய வீதிகளான சின்னக்கடைவீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.