சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் வருமான வரித்துறையினருக்கு பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் ஐந்து இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது சென்னையில் ஏழுகிணறு காவல் எல்லைக்கு உட்பட்ட கொண்டித்தோப்பு சக்கரசெட்டி தெருவில் உள்ள இந்துராம் சௌத்ரி என்பவர் வீட்டிலும், ரைஸ் மில் சாலையில் உள்ள ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதே போன்று ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.