
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வருமானச் சான்று தரவுகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு தகுதியுடைய குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. இதற்காக ஏற்கனவே பல்வேறு கட்ட விண்ணப்ப முகாம்கள் நடத்தப்பட்டு தற்போது மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டின் காலாண்டு அரையாண்டுகளில் உரிமைத்தொகை பெறுபவர்களின் வருமானச் சான்று தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருமானம் உயர்ந்திருந்தால் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர, கனரக வாகன பதிவு, பத்திரப்பதிவு குறித்து ஆய்வு செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தற்பொழுது வெளியிட்டுள்ள அரசாணையில், 'தமிழ்நாட்டில் ஒரு கோடியே 5 லட்சம் மகளிர் தற்போது ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பெறும் திட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். பிறப்பு, இறப்பு அடிப்படையில் மாதந்தோறும் சில பயனாளிகளின் எண்ணிக்கை முடிந்துவிடும். இதனால் மாதந்தோறும் ஆய்வுகளை நடத்த தமிழக அரசு முன்வந்துள்ளது. சமூக பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய தரவுகள், வருமான தரவுகள், நான்கு சக்கர வாகன பதிவு போன்றவை செய்திருந்தால் அவர்களின் ஆயிரம் ரூபாய் நிறுத்தப்படும். அதேபோல் காலாண்டு அடிப்படையில் பொது விநியோகத் திட்டம், சரக்கு மற்றும் சேவை வரி, நில உடமை தரவுகள் ஆய்வு செய்யப்படும். அதேபோல் மின்சார பயன்பாட்டு தரவுகள் ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கு அதிகமாகஇருந்தால் அவர்களுக்கான உரிமை தொகை நிறுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே பயனாளிகளின் பட்டியல் புதுப்பித்தல் மற்றும் நிராகரித்தல் ஆகியவை இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)