Skip to main content

தொடர் கனமழை... அதிகரிக்கும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் சம்பவங்கள்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Incidents of being swept away by the continuing floods due to the continuous heavy rains

 

சமீபத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகளிலும், ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. மேலும் ஏரிகள், குளங்கள் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் மிக அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள், வீடுகள், கிராமங்கள், தொழிற்சாலைகள் என எங்கும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தத்தளித்துவருகிறார்கள். இப்படி பெருக்கெடுத்து ஓடும் ஆறு, ஓடை தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் மக்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது.

 

கடந்த 22ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணிமுத்தாறு வெள்ளத்தில் பெரிய கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 85 வயது பெரியவர் வடிவேல் என்பவர் மணிமுத்தாறு கரைகள் உள்ள விநாயகர் கோவில்படித்துறையில் இறங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக கால் தவறி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தீயணைப்புத் துறையினர் படகு மூலம் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பூதாமூர் அருகே முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார் பெரியவர் வடிவேல். அதேபோல் திட்டக்குடி அருகே உள்ள மேல் ஆதனூர் ஊரைச் சேர்ந்த குகன் என்பவரது மகன் 6 வயது அருணாஸ். இவர் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தார்.

 

நேற்று முன்தினம் (27.11.2021) அவரது வீட்டின் அருகே ஓடும் ஓடைக்கு சிறுவர்களுடன் வேடிக்கை பார்க்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அருணாஸ் ஓடைக் தண்ணீரில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து, திட்டகுடி தீயணைப்பு நிலைய அலுவலர் வசந்த ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் முதல் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், ஆதனூரிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் ஓடையின் அருகே முட்புதரில் சடலமாக அருணாஸ் மீட்கப்பட்டார். போலீசார் சிறுவன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அதேபோல் கடலூர் அருகே உள்ளது நாராயணபுரம். இந்த ஊர் அருகில் ஓடும் மலட்டாறு பகுதியில் ராசாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது அபினேஷ், 20 வயது பாலாஜி ஆகிய இரண்டு இளைஞர்களும் தங்களது சக நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்றனர்.

 

அதில் பாலாஜி, அபினேஷ் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்டு சக நண்பர்கள் கூச்சலிட்டனர். தகவலறிந்த கடலூர் தீயணைப்பு வீரர்கள், ரெட்டிச்சாவடி போலீசார் ஆகியோர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களையும் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் தேடியும் இரு இளைஞர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தேடும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. இப்படி தினசரி தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது வேதனையாக உள்ளது. ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்க்கச் செல்லும் சிறுவர்கள், பெரியவராக இருந்தாலும் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திவருகிறது. பெற்றோர்களும், உறவினர்களும் தங்கள் பிள்ளைகளைக் கவனமுடன் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

விடிய விடிய கனமழை; 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Heavy rain at dawn; The tragedy of a 9-year-old girl

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (08.01.2023) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்த வீடு என்ற பகுதியில் ராஜசேகர் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜசேகரின் 9 வயது மகள் மோனிஷா என்பவர் உயிரிழந்தார். மேலும் ராஜசேகரின் மகன் மோகன்தாஸ்(12) இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். கனமழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுமி மோனிஷா பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.