எங்கேஎன்ன செய்தாலும், அட, கொலையே நடந்தாலும், அந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி,ஏதோ ஒரு கோணத்தில் காட்சியைப் பதிவு செய்துவிடுகிறது. ஆனாலும், சர்வ சாதாரணமாகக் கொலைகள்நடக்கின்றன. சிசிடிவிக்களும் சளைக்காமல் பதிவு செய்துவிடுகின்றன. விருதுநகர், அல்லம்பட்டியில், 12-ஆம் தேதி இரவு, அப்படி நடந்த ஒரு கொலைதான் சிசிடிவி காட்சியாக வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘எல்லாம்முன்விரோதம்தான்’ என்கிறது விருதுநகர் காவல்துறை.
அப்படி என்ன பகையாம்?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பகை வளர்ந்திருக்கிறது. விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கட்டிடத்தொழிலாளியான சங்கர் என்ற சங்கரேஸ்வரன். இவரது பெரியப்பா மகளைக் கேலி செய்தார் முத்துக்காமாட்சி.மேலும் சங்கரின் உறவுக்காரப் பெண் ஒருவருடனும் தகாத தொடர்பு வைத்திருந்தார். அதனால்,சங்கரின் உறவினரான சுகன்ராஜ் முத்துக்காமாட்சியைக் கண்டித்தார். அந்த ஆத்திரத்தில்,2018, பிப்ரவரியில் முத்துக்காமாட்சி உள்ளிட்ட சிலர் சுகன்ராஜை ஆயுதங்களால் தாக்கி ஊனமாக்கினார்கள். கைதாகி, மூன்றே மாதங்களில்(2018 மே) சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த முத்துக்காமாட்சியை ஆட்டோவில் வந்த கும்பல்வெட்டி கொலை செய்தது. பத்து பேர் மீது விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குபதிவாகி, சண்முகம், சங்கர், செல்வம், வேல்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பிணையில் வெளிவந்த சங்கரை முத்துகாமாட்சி தரப்பினர் வெட்டிக் கொலை செய்தனர். இந்தக் கொலை வழக்கில் முத்துராமன்பட்டியைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். பிணையில் வெளிவந்த அந்த அருண்பாண்டியனும், மூன்று மாதங்களுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
2018 பிப்ரவரியில் சுகன்ராஜ் வெட்டப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று கொலைகள் நடந்துள்ளன.அதன் தொடர்ச்சியாகத்தான், நேற்றிரவு 4-வது நபராக (12-ஆம் தேதி) சண்முகம் என்ற சண்முகவேல்ராஜன் கொலை செய்யப்பட்டு, அந்தக் கொலைவெறித் தாண்டவம் சிசிடிவியில் பதிவாகி, ஒட்டுமொத்த விருதுநகரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
யார் இந்த சண்முகவேல்ராஜன்?
ரியல்எஸ்டேட் தொழில் செய்துவரும் சண்முகவேல்ராஜனுக்கு மூன்று மாதங்களுக்கு முன் அதிமுகவில் மாணவரணி அவைத்தலைவர் பொறுப்பு தந்தனர். இவருடைய மனைவி வசந்தி, விருதுநகர் அருகிலுள்ள காமராஜர் பொறியியல் கல்லூரியில் அலுவலகஎழுத்தராகப் பணியாற்றுகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு தன் வீட்டிலிருந்த சண்முகவேல் ராஜனை டூ வீலர்களில்வந்த 8 பேர் கொண்ட கும்பல் வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுதப்பி ஓடியது. சம்பவ இடத்திலிருந்து சண்முகவேல்ராஜனின் உடலை மீட்ட விருதுநகர் கிழக்குகாவல்நிலைய போலீசார் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக்கொலையில் நடந்த குளறுபடி என்னவென்றால், சண்முகவேல்ராஜனை அந்தக் கும்பல் மாறி மாறி வெட்டியபோது, அனுபவமின்மை காரணமாக, தவறுதலாக ஒருவரின் கையையும், இன்னொருவரின் தலையையும் அரிவாள் பதம் பார்த்துவிட்டது. வலி பொறுக்க முடியாத அவர்கள், ரத்தக் காயங்களுடன் 108 ஆம்புலன்ஸை அழைத்திருக்கின்றனர். அதனால்தான், சதீஷையும் சேர்மராஜையும் காவல்துறையால் கைது செய்ய முடிந்திருக்கிறது.மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.
“சுகன்ராஜ் வெட்டுப்பட்டபோதே விருதுநகர் காவல்துறை உஷார் ஆகியிருக்க வேண்டும். அதற்கு பழிதீர்க்கும்விதமாக முத்துக்காமாட்சி கொலை செய்யப்பட்டபோதாவது எச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். பெண் தொடர்பில் ஆரம்பித்து, இத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன. வழக்கு பதிவுசெய்வது மட்டும்தான் காவல்துறையின் பணியா? தனிப்பிரிவு போலீசார் பழிக்குப்பழி வன்மத்தைஏன் ‘ஸ்மெல்’ செய்யவில்லை? அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான செயலிலும் இறங்கவில்லை? சண்முகத்தை அந்தக் கும்பல் வெட்டியபோது அந்த மூதாட்டி (அம்மா) புகுந்து தடுக்க முயற்சிக்கிறார்.அவர் பக்கமும் அரிவாளைத் திருப்பி கீழே தள்ளிவிடுகிறார் முகத்தில் கர்ச்சீப் மாட்டியகொலையாளி ஒருவர். இதெல்லாம் கொடுமை அல்லவா?” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள்.
தனக்கு விரோதமானவர்கள் எந்த நேரத்திலும் தன்னைத் தாக்குவார்கள் என்பதை அறிந்தேதான், தன் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்கிறார் சண்முகவேல்ராஜன். அந்த கேமராவில் பதிவான ‘கொலைக்காட்சி’வெளியே ‘லீக்’ ஆனது, விருதுநகர் மாவட்டத்தில்புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் எஸ்.பி. பெருமாளைரொம்பவே ‘டென்ஷன்’ ஆக்கியிருக்கிறது.
ஒரு உயிரைப் பறிப்பது எத்தனை கொடுமையானது! சட்டத்தின் மூலமாக தண்டனை கிடைக்குமென்றாலும், சர்வ சாதாரணமாக கொலைகள் நடக்கின்றனவே!