வால்பாறையில் காலில் கட்டியால் நடக்கமுடியாமல் உணவு உட்கொள்ளாமல் அவதிப்பட்டு வந்த 8 மாத குட்டியானை உயிரிழப்பால் தாய்யானை அந்த பகுதியை முகாமிட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஆனைமுடி எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு கூட்டமாக வந்த காட்டுயானைக் கூட்டத்தில் ஒரு 8 மாத குட்டியானை இடது பின்காலில் பெரிய கட்டியோடு நடக்கமுடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்ததைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் அப்பகுதிக்குச்சென்ற மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜ் வனவர் ஆனந்தன் தலைமையிலான வனத்துறையினர் கட்டியால் அவதிப்பட்டு வந்த யானைக்குட்டியை கண்காணித்து மருத்துவர் அறிவுரைப்படி பழங்களில் மாத்திரையை சேர்த்து குட்டியானை உட்கொள்ளும்படி தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கூட்டமாக நின்றிருந்த யானைகள் குட்டியானையை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் தாய்யானை தனது குட்டியைவிட்டு பிரியாமல் குட்டியானையை சிறிது சிறிதாக நகர்த்தி அப்பகுதியிலேயே முகாமிட்டிருந்தது. மேலும் குட்டியானை தொடர்ந்து உணவு உட்கொள்ளாமல் மிகவும் சோர்வடைந்து பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று அந்த குட்டியானை உயிரிழந்தது. இதை அறிந்த வனத்துறையினர் அந்த இடத்தை விட்டு நகராமல் அந்த பகுதியை முகாமிட்ட தாய்யானையை அப்பகுதியிலிருந்து விரட்டிய பின் உயிரிழந்த குட்டியானையை மருத்துவர் மெய்யரசன் மருத்துவ பரிசோதனை செய்து, பின் அதே பகுதியில் குழிதோண்டிபுதைத்தனர்.
மேலும் உயிழந்த குட்டியானையை பிரிந்த தாய் யானை அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.