Skip to main content

'சீமான் வீட்டில் நடந்த சம்பவம்'-காவல்துறை விளக்கம்

Published on 27/02/2025 | Edited on 27/02/2025
'Incident at Seeman's house' - Police explanation

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் உயர்நீதிமன்றம் 12 வாரத்தில் வழக்கை முடிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் சீமான் ஆஜராகும்படி  வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

சம்மனில் குறிப்பிட்டிருந்தபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இருப்பினும் அவர் கட்சிப் பணிக்காகச் சென்றிருப்பதாகக் கூறி அவரது சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இதன் காரணமாக நாளை (28.02.2025) காலை 11 மணிக்கு சீமான் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டினர். அதில், ‘விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் இருந்து வந்த நபர் ஒருவரால் கிழிக்கப்பட்டது.

இந்த சம்மனை கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளர் சீமான் வீட்டுக் காவலாளி உள்ளே விடாமல் தடுத்துள்ளார். இந்நிலையில் சீமானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற போலீசாரை தாக்கியதாக வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டார். காவலாளி அமல்ராஜ் வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்து இழுத்து சென்றனர். அவர் முன்னாள் எல்லைப் பாதுகாப்பு வீரர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீமான் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதில், 'சீமான் வீட்டில் வளசரவாக்கம் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்தது தொடர்பாக விசாரிக்க நீலாங்கரை போலீசார் அங்கு சென்றனர். விசாரிக்க சென்ற நிலாங்கரை காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் இருந்த காவலாளி தடுத்து நிறுத்தியுள்ளார். காவலாளியிடம் துப்பாக்கி இருப்பதாக கூறியதால் அதைக் கைப்பற்ற உள்ளே செல்ல காவல் ஆய்வாளர் முற்பட்டார்.  காவலாளி அமல்ராஜிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் 20 தோட்டாக்கள் இருந்தது. அந்த துப்பாக்கி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. துப்பாக்கி வைத்திருக்க உரிமம் இருந்துள்ளது. காவல் ஆய்வாளர் பிரவீன் உள்ளிட்ட மூன்று காவலர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவலாளி அமல்ராஜ் மீது பி.என்.எஸ் 109 பிரிவின்படி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்