ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமிகள் 2 பேர் தாமரைக் கொடிகளில் சிக்கிக் கொண்டதால் நீரில் மூழ்கி பலியான சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் வட்டம், மீமிசல் அருகில் உள்ள பழங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகள் பவதாரணி (17), எம்.ஆர். பட்டிணம் ராயப்பன் மகள் பிரியா (16) ஆகிய இருவரும் வெளிவயல் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். நீண்ட நேரமாக அவர்களை காணவில்லை என உறவினர்கள் தேடியபோது, ஏரியில் படர்ந்திருந்த தாமரைக் கொடிகளில் சிறுமிகள் இருவரும் சிக்கி இருப்பதை பார்த்து இருவரையும் மீட்டு மீமிசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிகள் இருவரும் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இந்த தகவல் அறிந்து வந்த மீமிசல் போலிசார் சம்பவம் குறித்து விசாரணை செய்துவருகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் தற்போதைய சூழ்நிலையில், துக்க நிகழ்ச்சியில் 30 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது என்றும் சமூக இடைவெளியில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியதால் அதன்படியே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. இரு சிறுமிகள் இறந்த சம்பவத்தால் அந்த கிராமங்களே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.