தண்ணீர் வரத்தற்ற நேரங்களில் ஆறு, வாய்க்கால்களில் பொதுமக்கள் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுகின்றனர். இதனால், தண்ணீா் வரும் நாட்களில் கழிவுகள் ஆங்காங்கே தேங்கி, தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் குளம், குட்டைகளுக்கும், பாசன வாய்க்கால்களுக்கும் தண்ணீர் செல்வதில்லை.
இந்தநிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள ஆற்று வாய்க்கால்களைப் பல வருடங்களுக்குப் பிறகு இளைஞர்கள் சீரமைத்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீரோடு அடித்துவரப்பட்ட கழிவுகள் தேங்கி குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.பேராவூரணி, நாடியம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய குப்பைகளை இளைஞர்கள் அகற்றியதால் பல வருடங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு குளங்களில் தண்ணீர் தேங்கியது.
அதேபோல இந்த வருடமும் கல்லணையில் வந்த தண்ணீர் கடைமடைக்குச் செல்லும் முன்பே ஆங்காங்கே அடைத்துக் கொண்டது. அதேபோல தான் நாடியம் கிராமத்திலும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு பெரியகுளம், மற்றும் கோட்டைக்குளத்திற்குத் தண்ணீர் செல்வது தடைபட்டது. அதனைப் பார்த்த இளைஞர்கள் தன்னார்வத்தோடு தண்ணீருக்குள் இறங்கி தேங்கி இருந்த குப்பைகளை அகற்றினர். அதன்பின், குளங்களுக்குத் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அதில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என ஒரு டன் அளவிற்கு அகற்றப்பட்டது. இவை எல்லாம் குளத்திற்கும், வயல்களுக்கும் போனால் எப்படி விவசாயம் செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
இதுபோல நீர்நிலைகளில் மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளைப் போடாதீர்கள் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.