incident near edappadi

Advertisment

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனைத் தந்தையும் உறவினர்களும் சேர்ந்து விஷ ஊசி செலுத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியில் உள்ள கட்சுபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் பெரியசாமி. லாரி ஓட்டுநரான பெரியசாமிக்கு 14 வயதில் வண்ணத்தமிழ் என்ற மகன் இருந்தான். அண்மையில் மருத்துவ பரிசோதனையில் வண்ணத்தமிழின் காலில் புற்றுநோய் கட்டி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வண்ணத்தமிழின் அப்பா பெரியசாமி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மகனைச் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். இருப்பினும் உடல்நலம் குன்றியதால் வண்ணத்தமிழனை வீட்டுக்கே கொண்டுவந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் மிகவும் உடல்நலம் குன்றிய வண்ணத்தமிழ் எழுந்து நடக்க முடியாமல் படுத்தப்படுகையாக ஆகிவிட்ட நிலையில் உடல் முழுவதும் புற்றுநோய் பரவி புண் ஏற்பட்டு சீல் பிடித்த நிலையிலிருந்துள்ளார். தினம் தினம் அவதிப்பட்டுவந்த வண்ணத்தமிழன் படும்பாட்டைக் கண்டு மனம் ஒப்பதாகத் தந்தை அவரது உறவினரும் தனியார் ஆய்வகத்தில் வேலைசெய்பவருமான பிரபு என்பவரை அழைத்து வந்து விஷ ஊசி செலுத்தி மகன் வண்ணத்தமிழை கொன்றதாக ஊர் முழுக்க தகவல் பரவியது.

Advertisment

இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீஸார் சிறுவனின் தந்தை பெரியசாமி மற்றும் பிரபு ஆகியோரைப் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாகச் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சிறுவன் வண்ணத்தமிழின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விஷ ஊசி செலுத்தி புற்றுநோய் பதித்த சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.