Skip to main content

முதல்வர் வீட்டின் முன் தற்கொலை முயற்சி ஏன்?-நேரில் சென்ற அமைச்சர் மா.சு!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

incident in front of the Chief Minister's house ... The Minister who went in person and inquired about his health

 

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லம் அருகே ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையின் மையப்பகுதிகளான ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் மு.க.ஸ்டாலினின் இல்லம் அமைந்துள்ளது. கோட்டூர்புரம் சாலையும் சித்தரஞ்சன் சாலையும் இணையும் இடத்தில் முதல்வரின் வீடு இருப்பதால் எப்போதுமே பரபரப்பாக இருக்கும். இதனால் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் வீட்டிற்கு முன்பகுதியில் எப்போதும் இருப்பார்கள். மேலும், முதல்வரைச் சந்திக்கத் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் எனத் தொடர்ந்து வீட்டிற்கு வருவதால் பாதுகாப்பில் எந்தக் குறையும் வரக்கூடாது என போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். 

 

இந்நிலையில், இன்று (27.09.2021) காலை முதல்வரின் வீடு இருக்கும் சித்தரஞ்சன் சாலைக்கு வந்த 45 வயது நபர் ஒருவர், கையில் கொண்டுவந்திருந்த பெட்ரோலை மேலே ஊற்றித் தீவைத்துக்கொண்டார். இந்த சம்பவத்தைச் சற்று தூரத்தில் நின்ற போலீசார் பார்த்துவிட, நொடிப்பொழுதில் அவர் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் அந்த நபரின் கைகளில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தென்காசி ஊராட்சி மன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும், ஆனால் சிலர் தன்னை மிரட்டுவதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட அவரை தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று சந்தித்தது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.