தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் தாக்கல் செய்கிறார்.
2023 -2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில் நிதியமைச்சர் முன்வரிசையில் நின்று படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிதியமைச்சர் தனது உரையைத் துவங்கும் போதே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். எனினும் நிதியமைச்சர் தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்தார்.
இதில் உயர் கல்வி திறன் மேம்பாட்டுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் பேசியபோது, “2877 கோடி ரூபாய் செலவில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. 54 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள் 2783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும். 120 கோடி ரூபாயில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
குடிமைப் பணி தேர்வு எழுதும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 1000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்கு தயாராகுவதற்காக மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக உயர் கல்வித் துறைக்கு 6967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது” எனக் கூறினார்.