Skip to main content

மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு!

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

Incentive hike for physically chalanged athletes

 

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தேசிய அளவில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத் தொகைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத் தொகை வழங்கிட கடந்த 2019 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் ஒலிம்பிக் போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகள், காமன் வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், அகில இந்திய பல்கலைகழங்களுக்கிடையேயான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் இடம் பெற்றிருந்தன. தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை வழங்கும் பிரிவு இடம் பெறவில்லை.

 

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைகள் வழங்கப்படாத குறையினை கண்டறிந்து அதனைக் களைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகள் மூத்தோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்கத்தொகைகள் முறையே ரூ.5 இலட்சம், ரூ.3 இலட்சம் மற்றும் ரூ.2 இலட்சம் எனவும் இளையோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்கத்தொகைகள் முறையே ரூ.3 இலட்சம், ரூ.2 இலட்சம் மற்றும் ரூ.1.50 இலட்சம் எனவும் வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இவர்களுக்கெல்லாம் நிச்சயம் நிவாரணம் உண்டு” - சென்னை மக்களுக்கு பெரும் ஆறுதல் செய்தி 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
- Tamil Nadu Government explanation Why provide Rs.6,000 in cash for cyclone michaung

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (09-12-23) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும். வெளியூரிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை எனப் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அதனால், இந்த நிவாரணத் தொகை ரூ. 6,000 ரொக்கமாக வழங்கப்படவுள்ளது. இந்த புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும்’ என்று விளக்கம் அளித்துள்ளது. 

Next Story

கருவாடை வாரி இறைத்த அதிகாரி; மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

The tragedy of a disabled woman in sayalkudi

 

ராமநாதபுரம் சாயல்குடி அருகே கருவாட்டு கடை வைத்திருந்த பெண் மாற்றுத்திறனாளியை அதிகாரி ஒருவர் தரக்குறைவாக பேசி, விற்பனைக்கு வைத்திருந்த கருவாடுகளை தூக்கி சாலையில் வீசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்து வந்த நிலையில் அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்படுவது வழக்கம். வார சந்தையில் ஒரு சில கடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சியின் செயல் அலுவலர் சேகர் என்பவர் ஆய்வு செய்தார். அப்பொழுது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அந்த பகுதியில் கருவாட்டு கடை வைத்திருந்தார். கடையை அகற்றும் படி சொன்ன அலுவலர் சேகர், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து மாற்றுத்திறனாளி பெண்ணை தரக்குறைவாக திட்டியதோடு, விற்க வைக்கப்பட்டிருந்த கருவாடுகளை தூக்கி சாலையில் வீசினார்.

 

இதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தட்டிக் கேட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தரை குறைவாக நடந்துகொண்ட அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி ஆணையருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.