Skip to main content

காமராஜர் பிறந்த மாவட்டத்திலும் காலை உணவுத் திட்ட தொடக்க விழா! அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024

 

உலகிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளதாகக் கூறப்படும்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை,  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்திலுள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தினை விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி எஸ்.பி.கே. தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு துவங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினார்.

பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்ததினத்தை முன்னிட்டு, விருதுநகர் மதுரை சாலையிலுள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், தக்கம் தென்னரசுவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,   விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராஜபாளையம் தொகுதியிலும் தளவாய்புரம் ஊராட்சி பு.மூ.மா.அம்மையப்ப நாடார் ஆரம்பப் பள்ளி மற்றும் கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் இந்து நாடார் தொடக்கப்பள்ளி போன்ற பள்ளிகளில், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தொடங்கிவைத்து, குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவைச் சாப்பிட்டார். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாகர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திலும் அவருடைய பிறந்தநாள் விழா மற்றும் காலை உணவுத்திட்டத்தின் தொடக்க விழாவை சிறப்புடன் நடத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ. போன்ற மக்கள் பிரதிநிதிகள் கர்மவீரருக்கு புகழ் சேர்த்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்