கரோனா பரவலைத் தடுக்க தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஊரடங்கு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்திருமணம், இறப்பு, விவசாயம் சார்ந்த பணிகள்,மருத்துவம் சார்ந்த தொழில்களுக்கு மூலப்பொருள் பெற்று வர, அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு வர மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லவும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் அனுமதி வாங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கான அனுமதியை வேளாண்மை துறை வழங்குகிறது.
இந்நிலையில், இதற்கான அனுமதிமாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரத்தேவையில்லை. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செயல்படும் இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பித்தால், பரிசீலனை செய்து, ஆன்லைன் வழியாகவே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் தாசில்தார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நேரடியாக வந்தும் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
தினமும் 300 பேருக்கும் குறையாமல் ஆன்லைனில் விண்ணப்பித்து வந்தனர். தொடக்கத்தில் ஆன்லைனில் அனுமதி தந்துவந்தார்கள். கடந்த 10 தினங்களுக்காக ஆன்லைனில் எத்தனை முறை விண்ணப்பித்தாலும் அனுமதி யாருக்கும் கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு வருகிறது. தாசில்தார் அனுமதி தரலாம் என்கிற அனுமதி வழங்கப்பட்டுயிருந்தாலும் அதனையும் அதிகாரிகள் வழங்குவதில்லை.
இதனால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தவாசி, ஆரணி, போளுர் என மாவட்டத்தின் தொலை தூரத்தில் இருந்தும் பொதுமக்கள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில் இருசக்கர வாகனத்திலேயே நீண்ட தூரம் பயணித்து வருகின்றனர். அப்படி வரும்போது பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் கண்காணிக்கும் காவல்துறை வழக்குப் பதிவு செய்கிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியாகின்றனர்.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி வழங்கும் பொதுநிர்வாகப் பிரிவில் விசாரித்தபோது, தினமும் 400 மனுக்களுக்கு குறையாமல் வருகின்றன. இதில் மனுக்களின் தன்மையைப் பொருத்து 250 வரை அனுமதி வழங்கப்படுகிறது. வந்தவாசியில் இருந்து ஒருவர் 80 கிலோ மீட்டர் கடந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து சேலத்தில் உறவினர் இறப்புக்குச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்மென கேட்டு முறையிட்டுள்ளார். இதனை தாசில்தாரே வழங்கியிருக்கலாம் ஏனோ வழங்கவில்லை. நாங்கள் அனுமதி வழங்கி அனுப்பினோம். இப்படிப் பல உள்ளன. கோட்டாச்சியர்கள் தற்போது வேலைப்பளுஅதிகம் இல்லாமல் உள்ளார்கள். அவர்களையும் அனுமதி வழங்க உத்தரவிட்டால் செய்யார், ஆரணி பகுதியில் இருந்து மக்கள் இங்கு வரத்தேவையில்லை, அலைச்சல் குறையும் என்றார்.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இணைய வழி அனுமதியை ஏன் வழங்குவதில்லை, எதனால் அது முடக்கிவைக்கப்பட்டுள்ளது என்கிற கேள்வியை முன்வைத்தபோது, சில அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
மாவட்ட ஆட்சியர் இதனைக் கவனிக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.