Skip to main content

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிக்கு சிறை!

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

Imprisoned ... female civil servant who took bribe !!

 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான சமூக நலத்துறை அலுவலகம், விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. சின்ன சேலம் அருகிலுள்ள தாகம் தீர்த்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்.

 

தனது மகளுக்கு திருமண உதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம், 50 ஆயிரம் நிதி உதவித் தொகை பெறுவதற்காக முறைப்படி ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார். இந்தநிலையில், அந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி, அரசுக்குப் பரிந்துரை செய்து, நிதி உதவி கிடைக்கப் பெறச்செய்ய வேண்டிய அதிகாரி மாவட்ட சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர். அதன்படி, இரு மாவட்டங்களில் விரிவாக்க நல அலுவலர் ஆக இருப்பவர் ஜெயலட்சுமி.

 

ராமலிங்கம் முறைப்படி அனுப்பிய திருமண உதவி கோரிய மனு ஜெயலட்சுமியிடம் விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையின்போது ஜெயலட்சுமி, ராமலிங்கத்திடம் திருமண நிதி உதவித் தொகைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றால், எனக்கு 1,500 ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

 

இதுகுறித்து, ராமலிங்கம், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ராமலிங்கத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ஜெயலட்சுமியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி, ராமலிங்கம் அந்த நோட்டுகளை நேற்று காலை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமியிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயலட்சுமியை கையும் களவுமாகக் கைது செய்தனர்.

 

அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு ஜெயலட்சுமியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், கடந்த இரண்டு தினங்களில் மட்டும் இதே போன்று திருமண உதவி கோரிய பயனாளிகளிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற அரசு ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்