Skip to main content

"சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்!"- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

"An important milestone in the history of social justice!" - Pride of Tamil Nadu Chief Minister MK Stalin!

 

"இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுக் கொண்ட தி.மு.க.வுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி!" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (07/01/2022) வெளியிட்டிருந்த அறிக்கையில், "முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறேன். கடந்த பல ஆண்டு காலமாக தி.மு.க., அரசியல் களத்திலும் நீதிமன்றங்களிலும் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் விளைவாக, முதல் முறையாக அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

 

இது சமூகநீதியைப் பற்றிய புரிதலும் ஆழமான பற்றுதலும் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி! சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்!

 

இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4,000 மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும் இதன்மூலம் தங்களுடைய உரிமையை, பலனைப் பெறுவார்கள். நாடு முழுவதும் உள்ள கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, உச்சநீதிமன்ற வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு, வாதிட்டு வென்ற இயக்கம் தி.மு.க. என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். 

 

தமிழ்நாட்டில் தி.மு.க.வும், சமூகநீதியின்பால் பற்றுகொண்ட இயக்கங்களும் நடத்திய போராட்டம், இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. மண்டல் குழுப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்குத் தமிழ்நாடு ஆற்றிய பங்களிப்புக்கு ஈடானது இந்த வெற்றி!

 

மிகுந்த மனநிறைவோடு இந்தப் போராட்டத்தில் துணைநின்று பங்களித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

சட்டப்பூர்வமாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை, ஆதிக்க சக்திகளால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தி.மு.க. வாதாடி வந்ததைப் பெருமையோடு நினைவுகூர்கிறேன்.

 

உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்காடி வென்றோம். இப்போது இறுதிக்கட்டமாக அதைத் தடுக்கும் முயற்சியையும் உச்சநீதிமன்றத்தில் வாதாடி, கழகம் முறியடித்திருக்கிறது.

 

நமது கோரிக்கையின் நியாயத்தை ஒன்றிய அரசு தொடக்கத்தில் உணர மறுத்தது வேதனைக்குரியது. சென்னை உயர் நீதிமன்றத்திலும்கூட இடஒதுக்கீடு வழங்க மறுத்து வழக்காடியது. இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதிசெய்த பிறகும்கூட, ஒன்றிய அரசு அதை அமல்படுத்த முன்வரவில்லை. அதற்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும்கூட தி.மு.க. தொடர்ந்தது.

 

அக்கறையின்மையாலும் ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சியின் காரணமாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதி இப்போது துடைத்தெறியப்பட்டு இருக்கிறது. ஒன்றிய அரசு முனைப்பு காட்டி இருந்தால், இரண்டாண்டுகளுக்கு முன்பே இந்த ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். அதன் மூலம் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு உரிய பலனைப் பெற்றிருப்பார்கள்.

 

சமூகநீதியின் முன்னோடி மாநிலமான தமிழ்நாடும், சமூகநீதியில் மாறாத பற்றைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் அளித்துள்ள பங்களிப்பு வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும்.

 

அண்மைக் காலத்தில் எல்லா மாநிலங்களிலும் பரவலான அளவில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, அந்த மாநில மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை படிப்புகள் மட்டுமன்றி, எம்.பி.பி.எஸ். படிப்பிலும் அகில இந்தியத் தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்கப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒவ்வொரு மாநிலமும் அதன் இடஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்றி 100 விழுக்காடு இடங்களையும் நிரப்பிக் கொள்ளும் நடைமுறை வர வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் நிலை. அதை நோக்கிப் போராடுவதோடு, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீட்டை அமல்படுத்தவும் எதிர்காலத்தில் முயற்சிகளைத் தொடர்வோம்.

 

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில், உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இதுதொடர்பாகத் தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கு அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் உள்ளது. நேற்று நடந்த வாதத்தின்போதும் கூட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டையும் - உயர்சாதியினருக்கான ஒதுக்கீட்டையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது என்றும், சமமற்ற இரு பிரிவினரை சமமான தட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது என்றும் கழகத்தின் சார்பில் வாதாடிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி.வில்சன் எடுத்துரைத்துள்ளார்.

 

வருமானத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது  என்று இந்திரா சஹானி வழக்கில் அரசியல்சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பையும் அவர் நினைவூட்டி, தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். (Rs.8 lakh criteria so far as OBCs is concerned, EWS and OBC by no stretch of imagination can be considered same. They stand on a different footing. It's like trying to consider unequal as equal. So far as EWS is concerned, economic criteria cannot be sole criteria. This is also laid in Indira Sawhney case). வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள விரிவான விசாரணையின்போதும், அரசியல்சாசன அமர்வின் முன் உள்ள மூல வழக்கிலும், 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டவிரோதமானது என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து தி.மு.கழகம் விரிவான வாதங்களை வைக்கும், அந்த அநீதியை முறியடிக்கும் போராட்டத்திலும் வெல்லும்.

 

சமூகநீதி என்பது நெடும் பயணம்; தொடர் ஓட்டம். வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், எல்லாத் தளங்களிலும் தங்கள் பங்கைப் பெற்று சமூக மக்களாட்சியை நிலைநிறுத்தும் வரையிலும் நமது பணியையும் போராட்டத்தையும் சமரசமின்றித் தொடர உறுதி ஏற்போம்.

 

இந்தியா சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து நடைபோட தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழும்! திராவிட முன்னேற்றக் கழகம் அதற்கு என்றும் போராடும்!". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (24.04.2024) தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.