
சேலம் அருகே, தன்னுடைய தொடர்பில் உள்ள பெண்ணுடன் நெருங்கிப் பழகியதால் ஆத்திரத்தில் பழைய பேப்பர் வியாபாரி, தவில் கலைஞரை கட்டையால் அடித்துக் கொலை செய்தார்.
சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (50). பழைய காகிதம், பிளாஸ்டிக் பொருள்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (48) என்பவருடன் கடந்த 6 ஆண்டாக தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். குள்ளம்பட்டியைச் சேர்ந்த தவில் வாத்திய கலைஞர் கந்தசாமி (56). இவரும், சந்திரனும் நண்பர்கள். கோயில், திருவிழாக்களில் தவில் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, சந்திரனையும் உதவிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார் கந்தசாமி.
இதனால் அவர்களிடையே நெருக்கமான நட்பு இருந்து வந்துள்ளது. மேலும், மது அருந்தும்போது கந்தசாமி, சந்திரன், அவருடைய தொடர்பில் உள்ள மாரியம்மாள் ஆகிய மூன்று பேருமே ஒன்றாக மது குடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. மார்ச் 19ம் தேதியன்று மாலை, வலசையூர் காய்கறி சந்தை பகுதியில் அவர்கள் மூன்று பேரும் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது கந்தசாமியும், மாரியம்மாளும் நெருக்கமாக அமர்ந்து நீண்ட நேரம் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
இதைப்பார்த்த சந்திரன், அவர்களுக்குள் தவறான தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்தார். அவர்கள் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்ததை சகித்துக் கொள்ள முடியாத சந்திரன், கந்தசாமியிடம் பேசக்கூடாது என்று மாரியம்மாளை கண்டித்திருக்கிறார். அதை கந்தசாமி தட்டிக்கேட்டதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த சந்திரன், கீழே கிடந்த விறகு கட்டையால் கந்தசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார். மாரியம்மாள் தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கியுள்ளார். அவர்கள் அலறும் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் சென்றவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதைப் பார்த்த சந்திரன், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பலத்த காயம் அடைந்த கந்தசாமி, மாரியம்மாள் ஆகிய இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி கந்தசாமி மார்ச் 20ம் தேதி காலை உயிரிழந்தார். மாரியம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வீராணம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சந்திரனையும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக மாரியம்மாளையும் கைது செய்தனர்.