நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆசிரியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வினோத் விக்டர். இவர் கப்பலில் பணியாற்றி வருகிறார். அதேசமயம் இவர், வேளாங்கண்ணி மாதா குளம் அருகில் ஒரு தங்கும் விடுதி நடத்தி வருகிறார். வேலை நிமித்தமாக கப்பலுக்கு சென்றுவிடுவதால் விடுதியைச் சரிவர நிர்வகிக்கமுடியாமல் போனதால் அதே பகுதியைச் சேர்ந்த மதன்கார்த்தி என்பவரிடம் ஒருவருட குத்தகைக்கு வழங்கியுள்ளார்.
இந்தச் சூழலில், மதன்கார்த்தி, வினோத் விக்டரின் மனைவியோடு பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு விடுப்பில் வேளாங்கண்ணிக்கு வந்த வினோத், கார்த்தியின் நடத்தையிலும், விடுதி நிர்வாகத்திலும் சந்தேகம் ஏற்பட்டு, ஒப்பந்த செய்யப்பட்ட ஒரு வருட குத்தகைக்காலம் முடிந்ததும் விடுதியை காலி செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு கார்த்தி மறுக்கவே இருவருக்கும் இடையே சில மாதங்களாக பிரச்சனை மூண்டபடியே இருந்தது.
இந்த நிலையில் வினோத், தனது மனைவியோடு நாகப்பட்டினம் சென்றுவிட்டு வேளாங்கண்ணி திரும்பியுள்ளார். அப்போது, வேளாங்கண்ணி அருகே மதன்கார்த்திக்கும், அவரது நண்பர்கள் சிலரும் வினோத் வந்த காரை மறித்துள்ளனர். அந்த இடத்தில் முன்கூட்டியே திட்டமிட்டது போல காரை ஓட்டிவந்த டிரைவர் ஆல்வினும், வினோத்தின் மனைவியும் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டனர்.
வினோத் விக்டரின் காரை மதனின் சகாக்கள் அடித்து நொறுக்கி தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க காரை ஸ்டார்ட் செய்த வினோத் வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அவரை விடாமல் தனது நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மதன், வேளாங்கண்ணி ஆர்ச் அருகே காரை மறிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத், காரை மறித்த மதன் மற்றும் அவரது நண்பர் அமுதன் ஆகியோரை அடித்து தூக்கினார்.
இதில் இடது கை மற்றும் இடது மார்பு ஆகிய இடங்களில் படுகாயமடைந்த மதன் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அவருடைய நண்பர் அமுதன் படுகாயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வலது கண்ணில் ரத்தக்காயத்துடன், காரோடு நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் வினோத் விக்டர் ஆஜராகினார்.
வேளாங்கண்ணி போலீசார் வினோத் விக்டர் மற்றும் அவருடைய மனைவி மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணத்தை மீறிய உறவால் கணவனை கொலை செய்ய மனைவி திட்டம் தீட்டியதும், அதற்கு ஓட்டுநர் உதவியாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.