
கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவசனூர் கோட்டை காவல் நிலைய எல்லையில் உள்ளது எறையூர். இந்த ஊரைச் சேர்ந்த அருள் ஜோசப் என்கிற பொடையான், இருதய பவுல்ராஜ், குழந்தைசாமி என்கிற மொட்டையன் ஆகிய மூவரும் அரசு மற்றும் காவல்துறையின் (லைசன்ஸ்) அனுமதி இல்லாமல், 4 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்துள்ளனர். இவர்கள், கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த ரகசியத் தகவல் எலவசனூர் கோட்டை போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர்களைப் போலீஸார் இரகசியமான முறையில் கண்காணித்து அவர்களிடமிருந்து கள்ளத்துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர். அதோடு அவர்கள் மூவரையும் கைது செய்து விசாரணை செய்ததில், கள்ளக்குறிச்சி அருகிலுள்ள நா.குப்பம் என்ற ஊரைச் சேர்ந்த சாமிதுரை ஆசாரி என்பவர் இவர்களுக்கு ரகசியமான முறையில் நாட்டுத் துப்பாக்கிகள் தயார் செய்து கொடுத்துள்ள தகவல் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் சாமி துறையையும் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் இதேபோன்று நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பது, அதை வெளியில் ரகசியமாக விற்பதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. காவல்துறையும் மலைக்குச் சென்று அவ்வப்போது ரெய்டு நடத்தி கள்ளத் துப்பாக்கிகளைப் பலமுறை பறிமுதல் செய்துள்ளது. கள்ளத்துப்பாக்கி தயாரித்தவர், பதுக்கி வைத்திருந்தவர்கள் எனப் பல்வேறு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், “இதுபோன்று கள்ளத் துப்பாக்கிககளை, எந்தவிதமான அனுமதியுமின்றி வைத்திருப்பவர்கள், தாங்களாக முன்வந்து காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்கத் தவறினால் துப்பாக்கி வைத்திருப்பவர்களைக் கண்டுபிடித்து துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்வதோடு, சிறையில் இருந்து வெளியே வரமுடியாத அளவிற்குக் கடுமையான வழக்குகளையும் காவல்துறை பதிவு செய்யும்” என்று எச்சரித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில், கல்வராயன் மலையை ஒட்டியுள்ள நா.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுறை ஆசாரி இரகசியமான முறையில் கள்ளத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்துள்ளது அப்பகுதி மக்களைப் பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.