Skip to main content

சட்ட விரோத பார்கள்: “அதிகாரிகளை பணி நீக்க வேண்டும்” - அன்புமணி

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

“Illegal bars; Officers should be fired” - Anbumani

 

“தாம்பரம் பகுதியில் சட்டவிரோதமாக 77 மதுக்குடிப்பகங்களை நடத்த அனுமதித்தது யார்? டாஸ்மாக், காவல்துறை அதிகாரிகளை பணி நீக்க வேண்டும்” என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 77 மதுக்குடிப்பகங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆணையின் பேரில் வருவாய்த்துறையினர் மூடி முத்திரையிட்டுள்ளனர். இது பாராட்டத்தக்க நடவடிக்கை தான். அதே நேரத்தில், சட்டவிரோத மதுக்குடிப்பகங்களை இப்போது மூடி முத்திரையிட்ட அதிகாரிகள், கடந்த காலங்களில் அவற்றை கண்டும் காணாமலும் இருந்தது ஏன்? என்ற வினாவுக்கு அரசு விடையளிக்க வேண்டும்.

 

தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதியில் இப்போது மூடி முத்திரையிடப்பட்ட சட்டவிரோத மதுக்குடிப்பகங்கள் கடந்த பல ஆண்டுகளாக அதே பகுதியில் செயல்பட்டுக் கொண்டு தான் இருந்தன. அவற்றுக்கு டாஸ்மாக் நிறுவனம் மூலமாகத் தான் மதுப்புட்டிகள் அனுப்பப்பட்டு வந்தன. மதுக்குடிப்பகங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவது அப்பகுதியைச் சேர்ந்த  கலால்துறையினர், வருவாய்த்துறையினர், டாஸ்மாக் உயரதிகாரிகள், காவல்துறையினர்  என அனைவருக்கும் தெரியும்.  அவர்களின் ஆதரவுடன் தான் அவை செயல்பட்டு வந்தன.

 

சட்டவிரோத மதுக்குடிப்பகங்களை மூட வேண்டும் என்று பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கள்ளச் சாராயம், சயனைடு கலந்த சாராயம் கொடுத்து 25-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பிறகு தான் அரசு விழித்துக் கொண்டு சட்டவிரோத மதுக்குடிப்பகங்களை மூடி வருகிறது. இது போதாது. கடந்த காலங்களில் சட்டவிரோத மதுக்குடிப்பகங்கள் செயல்படுவதற்கு மறைமுகமாக ஆதரவளித்த கலால்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் டாஸ்மாக் உயரதிகாரிகள் அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் சட்டவிரோத மதுக்குடிப்பகங்களை ஒழிக்க முடியும்.

 

சென்னை புறநகர் உள்ளிட்ட சில இடங்களில் சந்துக் கடைகள் எனப்படும் சட்டவிரோத மதுக்குடிப்பகங்கள் மூடப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான சட்டவிரோத மதுக்குடிப்பகங்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றையும் உடனடியாக மூடுவதுடன், அவை இயங்குவதற்கு துணையாக இருந்த அனைவர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'பாதிப்பை தடுக்க அரசு தவறிவிட்டது'- ராமதாஸ் குற்றச்சாட்டு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

mm

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புயல் பாதிப்பை தடுக்க அரசு தவறிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புயல் அறிவிப்பு முன்பே வெளியாகியும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதிலிருந்து அரசு தவறிவிட்டது. கடந்த காலங்களில் இதைவிட மழை பெய்தாலும் அரசு திட்டமிட்டு இருந்தால் பாதிப்பை  குறைத்திருக்கலாம். மழைநீர் வடிகால் பணிகளுக்கு 4,000 கோடி செலவிட்டும் அதன் நோக்கம் நிறைவேறவில்லை. மழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடும்பங்கள் பொருளாதார, வாழ்வாதார இழப்பைச் சந்தித்துள்ளனர். மூன்று நாட்களாகியும் வெள்ளம் வடியாத நிலையில், குடும்பத்திற்கு தலா 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'இலச்சினையில் தன்வந்திரி'-அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Dhanvantri in alphabet; Immediate withdrawal - Anbumani Ramadoss insists

 

இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான  தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் தன்வந்திரி படம் இடம் பெற்றுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான  தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் தன்வந்திரி எனப்படும் கடவுளின் உருவப்படம் திணிக்கப்பட்டிருப்பதும்,  இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்ற பெயர் பொறிக்கப்பட்ட இருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது முற்றிலும் தேவையற்ற செயலாகும். இது கண்டிக்கத்தக்கது.

 

மருத்துவம் என்பது உயிர் காக்கும் தொழில் ஆகும். உயிரியலும், தொழில்நுட்பமும் தான் மருத்துவத்திற்கான அடிப்படை ஆகும். மருத்துவத்திற்கு மனிதநேயம் கூடுதல் தகுதி ஆகும். ஆனால், இவற்றில் எந்த ஒன்றுடனும் தொடர்பில்லாத தன்வந்திரி கடவுளின் படத்தை மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் சேர்ப்பது எந்த வகையில் நியாயம்? தன்வந்திரி என்பவர் பாற்கடலை தேவர்கள் கடையும் போது உருவெடுத்தவர்; அவரால் தான் ஆயுர்வேத மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது; அவர் தான் தேவர்களுக்கு மருத்துவம் அளித்தார் என்றெல்லாம் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவை அழகான கற்பனை என்பதைக் கடந்து வேறொன்றுமில்லை.

 

கற்பனைக் கடவுளை மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் திணிப்பது மிகவும் பிற்போக்கானது. மருத்துவக் கட்டமைப்பு, மனித வளம் இல்லாமல் மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்பட்டால், அதற்கான நடவடிக்கை  எடுக்கும் பொறுப்பில் உள்ள மருத்துவ ஆணையம் இப்படி ஒரு செயலை செய்திருக்கக் கூடாது. மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்காமல் தன்வந்திரியின் உருவப்படத்தை வைத்து அவரே மானசீகமாக மாணவர்களுக்கு  மருத்துவப் பாடம் நடத்துவார் என்று கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் கூறப்பட்டால், அதை மருத்துவ ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா?

 

மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் தன்வந்திரியின் படம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சேர்க்கப்பட்டு விட்டதாகவும்,  கறுப்பு - வெள்ளையில் இருந்த படத்திற்கு இப்போது வண்ணம் மட்டுமே சேர்க்கப்பட்டிருப்பதாகவும்  மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. தன்வந்திரி படம் எப்போது சேர்க்கப்பட்டிருந்தாலும் அது தவறு தான். அதற்கு இப்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை மதித்து இலட்சினையில் இருந்து தன்வந்திரி படம் நீக்கப்படுவது தான் முறையாகும்.

 

மருத்துவக் கல்லூரிகளில்  முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க நிகழ்ச்சியின் போது ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக மகரிஷி சரகர் உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளலாம் என்று  கடந்த ஆண்டு மருத்துவ ஆணையம் பரிந்துரைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது தன்வந்திரி படத்தை திணித்து அடுத்த சர்ச்சையை  ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவத்துறை வளர்ந்து விட்ட நிலையில், அதை மேலும் வலுப்படுத்த மருத்துவக் கல்வி  ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக, புராணங்களின் அடிப்படையில் சர்ச்சைகளை திணிக்க முயலக்கூடாது. தேவையின்றி ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் தன்வந்திரி படத்தை நீக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்