/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1623.jpg)
டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். இதில், அந்தந்த மாநிலங்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் அந்த அலங்கார ஊர்திகள் அமைந்திருக்கும். அந்தவகையில் இந்தாண்டுக்கான அலங்கார ஊர்தியை தமிழ்நாடு அரசு உருவாக்கியிருந்தது. ஆனால், ஒன்றிய அரசு நிராகரித்திருக்கிறது.
தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், மேற்குவங்க மாநிலத்தின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்குவங்க அலங்கார ஊர்தியை நிராகரித்ததற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சார்பாக அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார், பாரதியார் உள்ளிட்ட விடுதலை வீரர்கள் கொண்ட அலங்கார ஊர்தி சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டன. மேலும், மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், இவர்களைப் பற்றி சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனவும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகின.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது.
இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்” என்று பதிவிட்டு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)