அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனை தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை முன்னாள் அமைச்சரும், தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக புகார் பெறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையின் போது, அவர் 01/04/2015 முதல் 31/03/2022 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுய லாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூபாய் 58,44,38,252 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாகத் தெரியவந்தது.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''2017 ஆம் ஆண்டே புகார் கொடுத்துவிட்டேன். இந்த மன்னர்கள் ஊழல் தாண்டவம் ஆடிய போதே ஊழல் புகார் ஊழல் தடுப்பு பிரிவுக்கு கொடுக்கப்பட்டது. ரொம்ப நாளாக இந்த வழக்கு பெண்டிங்கில் இருந்தது. ஏனென்றால் கொள்ளையடித்ததே இவர்கள்தான் எனவே ஆட்சி மாற்றம் வந்தபின் விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்தோம். திமுக ஆட்சி வந்த பின்னும் அவர்களும் டிலே பண்ணுகிறார்கள் என்று நான் கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதத்திற்கு பதில் கடிதம் வந்துள்ளது. அதில் சீவியராக என்குவைரி போய் கொண்டிருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என சொல்லி பதில் எழுதியுள்ளார்கள்.
நாடும் தெரிந்துகொள்ள வேண்டும், மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். காமராஜ் என பெயர் வைத்திருக்கிறார் அந்த பெயரை மாற்றிக் கொண்டால் எனக்கு சந்தோசமாக இருக்கும். எம்ஜிஆர் 'என்னுடைய தலைவர்' என்று காமராஜரை கூறியுள்ளார். ஊழல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் காமராஜர், அண்ணா, ஜெயலலிதா போன்றவர்கள். இங்கு என்ன கொடுமை என்றால் காமராஜர் பெயரை வைத்துக் கொண்டு இவர்கள் இப்படி செய்கிறார்கள். இந்த ரெய்டில் இருந்து தப்பிக்கவே முடியாது. இந்த ரெய்டுக்காக தமிழக அரசை பாராட்டுகிறேன்'' என்றார்.