Skip to main content

'அவகாசத்தை மீறினால்... ' - வெளி மாநில பதிவு எண் பேருந்து விவகாரத்தில் அமைச்சர் பதில்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
 'If the time limit is exceeded...'-Minister's reply on the bus issue with out-of-state registration number

அவகாசத்தை மீறி திங்கட்கிழமைக்கு மேல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் எனத் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெளிமாநில  பதிவு எண்  கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில ஆம்னி  பதிவு எண் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுவதால் தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம், சாலை வரி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவை முழுமையாகப் பின்பற்றப்படாத சூழ்நிலையில் நாளை முதல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்கக் கூடாது எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நேற்று அறிவுறுத்தல் கொடுத்திருந்தனர். ஆனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் இதற்கான கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து  தற்போது வரும் திங்கட்கிழமை வரை அதற்கான அனுமதி வழங்கி இருக்கிறார்கள். எனவே திங்கட்கிழமை வரை தமிழகத்தில் வெளிமாநில  பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியது. திங்கட்கிழமைக்குப் பிறகு வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கினால் போக்குவரத்துத் துறையினுடைய விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் மணல் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காகக் கடலூர் முதன்மை நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் இன்று ஆஜராகி இருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''இரண்டு, மூன்று நாட்கள் விடுமுறை வருவதை ஒட்டி திங்கட்கிழமை வரை தேதி கேட்டிருக்கிறார்கள். போக்குவரத்து ஆணையர் திங்கட்கிழமை வரை வாய்ப்பு கொடுத்துள்ளார். செவ்வாய்க்கிழமைக்கு மேல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க முடியாது'' என்றார்.

'இயக்கினால் எந்த மாதிரி நடவடிக்கை இருக்கும்' எனச் செய்தியாளர்கள் கேள்விக்கு, ''பேருந்துகளை அரசு கையகப்படுத்திக் கொள்ளும். அந்தப் பேருந்தும் மீண்டும் தமிழக பதிவு எண்  மாற்றப்பட்ட பிறகு அவர்கள் செயல்படுத்த முடியும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்