சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால், அவனின் ஆசையை முதலில் தூண்ட வேண்டும் என நாயகன் வசனம் பேசுவார். அதுபோல், ஒரு லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவோம் என ஆசையை மக்களிடம் தூண்டிவிட்டுள்ளது ஒரு கம்பெனி.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில் சேவூர் என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமம் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னால் அமைச்சரும், ஆரணி எம்.எல்.ஏவுமான ராமச்சந்திரன் வசிக்கும் கிராமம். பட்டுப்புடவை உற்பத்தியில் முக்கியமான கிராமமிது. இந்த கிராமத்தில் உள்ள ஒருதனியார் லாட்ஜில் ஆருத்ரா கோல்டு கம்பெனி என்கிற பெயரில் கடந்த மே 6ஆம் தேதி ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அழகாக டெக்கரேட் செய்யப்பட்ட இந்த அலுவலகத்தின் திறப்புவிழா குறித்து எந்த ஒரு விளம்பரமும் செய்தித்தாள், லோக்கல் சேனல்களில்கூட செய்யவில்லை. ஆனால் கடந்த சிலதினங்களாக அந்த அலுவலகத்தின் முன் கூட்டம் குவிகிறது.
1 லட்ச ரூபாய் எங்களிடம் கட்டினால், பணம் கட்டிய நிமிடமே 1 கிராம் தங்க காயின் வழங்கப்படும். அது இரண்டு மாதத்துக்கு வழங்கப்படும். அடுத்த 4 மாதங்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 4 மாதங்களுக்கு வழங்கப்படும். 6வது மாதம் முதல் மாதம் 28,500 ரூபாய் வீதம் வழங்கப்படும். இரண்டு வருட முடிவில் டெப்பாசிட் செய்த 1 லட்ச ரூபாய் திரும்பி வழங்கப்படும். வட்டி தொகை சம்மந்தப்பட்டவரின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம் அல்லது நேரில் வந்தும் பெற்றுக்கொள்ளலாம் என கிராமங்கள் தோறும் ஏஜென்ட்கள் மூலமாக வாய்வழி பிரச்சாரத்தை செய்துள்ளனர் இந்த நிறுவனத்தினர். இதனைக்கேட்டு ஆரணியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள், அடேங்கப்பா இவ்ளோ வட்டியா என வாய் பிளந்தபடி ஒவ்வொருவரும் 1 லட்சம், 3 லட்சம் என வந்து டெபாசிட் செய்துள்ளார்கள்.
ஒரு லட்சத்துக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி என்பது ஒரு ரூபாய்க்கு 30 பைசா வட்டி. இவ்வளவு வட்டியெல்லாம் யாராலும் தரமுடியாது, ரிசர்வ் வங்கியால் பதிவு செய்யப்பட்ட சீட் கம்பெனிகள் கூட பொதுமக்களிடம் இவ்வளவு வட்டி வசூலிக்கவோ, தரவோ முடியாது. வட்டி வழங்குவது, பெறுவது குறித்து ரிசர்வ் வங்கி தெளிவாக விதிமுறைகளை வகுத்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் லட்ச ரூபாய்க்கு மாதம் 30 ஆயிரம் வட்டி என்றதும் பொதுமக்களில் படித்தவர், படிக்காதவர் என்கிற பாகுபாடின்றி வரிசைக்கட்டி வந்து டெபாசிட் செய்துள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் சென்றும் அவர்கள் அது குறித்து கண்டுக்கொள்ளவில்லையாம்.
இந்த நிறுவனம் ஆரணி மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு போன்ற இடங்களிலும் இப்படியொரு அலுவலகத்தை திறந்துவைத்து பொதுமக்களிடம் வசூல் நடத்திக்கொண்டு இருக்கிறது எனக்கூறப்படுகிறது.
இதன் உரிமையார் யார் என விசாரித்தவர்களிடம், ராஜசேகர் என்பதும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சொந்த ஊர், தற்போது சென்னையில் வசிக்கிறார், முன்பு துபாயில் வேலை செய்தவர், துபாயில் தங்கத்தின் விலை குறைவு, அங்கிருந்து தங்கம் கொண்டுவந்து இங்கே மக்களுக்கு குறைந்த விலையில் விற்கவே இந்த கம்பெனியை தொடங்கியுள்ளார் என வாடிக்கையாளர்களிடம் அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் சொல்லியுள்ளார்கள்.
பொருளாதார ரீதியாக சாத்தியமில்லாததை பொய் சொல்லி மக்களிடம் பணம் டெபாசிட் பெறுவது குறித்து, சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமென இடதுசாரி கட்சிகள் சார்பாக காவல்துறையினரிடம் புகார் சொல்ல முடிவு செய்துள்ளனர். விவகாரம் பெரியதானதும் இதுபற்றி காவல்துறை, வருவாய்த்துறை போன்றவை விசாரணையில் இறங்கின. மக்களிடம் டெபாசிட் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியில் பெறப்பட்ட அனுமதி ஆணை உள்ளதா என ஆரணி கிளை மேலாளர் அசோக்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து உரிமையாளர் ராஜசேகரிடம் தகவல் கூறி ஆவணங்களை எடுத்து வருவதாக கூறியுள்ளனர். மே 13 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல்துறை, வருவாய்த்துறை வாய்மொழியாக உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எந்த ஆவணமும் கொண்டுவரவில்லை. அதுமட்டுமின்றி நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகவுமில்லை. அதனை தொடர்ந்து மே 14ஆம் தேதி அதிகாரிகள் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.