Skip to main content

“சிஐடியுவைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் போராட்டம்” - விக்கிரமராஜா

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

 vickramarajah announcement If no action is taken against the CITU members, we will close the shops and engage in a struggle

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் இனி சிஐடியு தொழிலாளர்களுக்கு வியாபாரிகள் ஒருபோதும் பணி வழங்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா பேசுகையில், “வணிகர்கள் பேரமைப்பின் மூத்த உறுப்பினர் கந்தன் நேற்று (08 மார்ச்) திருச்சி பால்பண்ணை அருகில் புதிதாக திறக்கப்பட்ட லாரி புக்கிங் சென்டரில் நடந்த அடிதடியில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டார்.

 

சிஐடியுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கும்பல் அவரை மிக பலமாக தாக்கியதால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது குற்றப்பிரிவு 307 கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் இதற்கு உறுதுணையாக இருந்த சிஐடியு மாவட்டச் செயலாளர் ராஜா மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த ராமர் ஆகிய இருவரும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

 

சிஐடியுவின் கட்சி வேட்பாளர்கள் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு வியாபாரிகள் ஆதரவு தரமாட்டோம், டெபாசிட் கூட வாங்க முடியாத அளவிற்கு நாங்கள் அவர்களுக்கு எதிராக தேர்தல் பணியாற்றுவோம் என்று கூறுகின்றனர். வியாபாரிகளைத் தாக்கிய சிஐடியு மாவட்டச் செயலாளர் ராஜா மற்றும் ராமர் மீது கொலை வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். அவர்களோடு சேர்ந்து வந்த 20க்கும் மேற்பட்ட சிஐடியு கும்பலில் 8 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தப்பிச் சென்ற கும்பலை கைது செய்வதோடு சிறையில் அடைக்கபபட்டுள்ளவர்கள் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைமை அலுவலகத்தில் நேரடியாக சென்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட தலைவர் ராஜா மற்றும் அக்கட்சியை சேர்ந்த ராமர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இனி சிஐடியுவைச் சேர்ந்த எந்த ஒரு தொழிலாளிகளுக்கும் திருச்சி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் ஒருபோதும் வேலைவாய்ப்பு தரப்போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையையும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. 

 

தேர்தல் ஆணையம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்திருந்தாலும், தற்போது தேர்தல் ஆணையத்தின் உதவியோடு ஆங்காங்கே பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர். அதில் அவர்கள் பறிமுதல் செய்யும் பணங்களெல்லாம் பெரும்பான்மையானவை வியாபாரிகள் உடையதாகவே இருக்கிறது. அதில் ஒரு துயர சம்பவம், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் கடலை வியாபாரி இடமிருந்து ஐந்து லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாயில், அதிகாரிகள் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு மீதமுள்ள 4 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மட்டும் கணக்கில் காட்டியுள்ளனர். எனவே தேர்தல் ஆணையம் எங்களை நேரில் அழைத்துப் பேச வேண்டும் என்றும், மேலும் வியாபாரிகள் இந்தத் தேர்தல் காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் முன்வைத்து இருக்கிறோம். தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க கூடாது என்பதில் மிகத் தெளிவாக இந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையத்திற்கு எங்களுடைய ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்