/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a6933.jpg)
மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)