கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தொடர்ந்து நடைபெற்ற நிலையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் இரண்டு நாட்களுக்கு முன் வழங்கினார். அதில், "ஜூலை 11-ஆம் தேதி அன்று எடப்பாடி பழனிசாமி நடத்திய அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் செல்லாது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழுவுக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையே இணைந்து செயல்பட பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். ஆனால், அந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார்.
இந்நிலையில் இன்று பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசிய கோவை செல்வராஜ் அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, " 50 ஆண்டுகளாக தமிழகத்தில் நிலைத்திருக்கும் இந்த இயக்கத்தை நான்கு ஆண்டு காலம் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கைப்பற்ற நினைக்கிறது. ஓபிஎஸ் உழைத்ததால்தான் இவரால் முதல்வராக தொடர முடிந்தது. ஒருங்கிணைப்பாளர் பதவியை தேர்தல் ஆணையமே அங்கீகரித்த நிலையில் தன்னுடைய சுயநலத்திற்காக அதனைச் செல்லாது எனப் பொதுக்குழுவில் அறிவித்தார். இவர் யாருக்கு வேண்டுமானாலும் துரோகம் செய்வார். வாய்ப்பு கிடைத்திருந்தால் ஜெயலலிதாவுக்கே அவர் துரோகம் செய்திருப்பார்" என்றார்.