தமிழ்நாடு அரசு மருத்துவ துறை ஊழியர் சங்கத்தை முதல்வர் அழைத்துப் பேசி ஊழியர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் இல்லையென்றால் அக்டோபர் ஒன்றுக்கு பிறகு கருப்பு பட்டை அணிந்து வேலை செய்வது உட்பட பல்வேறு போராட்டங்களை சங்கம் அறிவிக்கும் என தமிழ்நாடு அரசு மருத்துவ துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் ஜி. அன்பழகன் கூறியுள்ளார். சங்கத்தின் பொதுக்குழு ஈரோட்டில் 24 ந் தேதி நடந்தது. அதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் ஜி. அன்பழகன் பேசுகையில்,
"பத்தாண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட மருத்துவ துறையின் கீழ் 25 ஆயிரம் பணியாளர்கள் இருந்தனர். தற்போது 2000 நிரந்தர பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். 17 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. சுமார் 6000 பணியாளர்கள் தொகுப்பு ஊதியம் மற்றும் அவுட்சோர்சிங் முறையில் குறைந்த ஊதியத்தில் பணி புரிகின்றனர். பண்ணோக்கு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் குறைந்த ஊதியத்தில் பணி அமர்த்தப்படுவதால் பணி நிரந்தரம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். நிரந்தர பணியிடம் கேள்விக்குறியாகி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்யும் அவர்களுக்கு பணி நிரந்தரம் பதவி உயர்வு என்ற எதுவுமே வழங்கப்படவில்லை இதனால் பாதிக்கப்படுவது நோயாளிகள் மட்டுமே. பிரச்சனைகள் குறித்து என்ஜிஓ யூனியன் முன்னாள் தலைவர் சூரியமூர்த்தி பல போராட்டங்கள் நடத்தியுள்ளார். அந்த சங்கத்துடன் எங்கள் சங்கம் இணைந்தது என்பதால் முதலமைச்சர் எங்கள பிரச்சினை குறித்து அழைத்துப் பேச வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும். அறுவை அரங்கு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர்களுக்கு எட்டு மணி நேர வேலையை உறுதி செய்திட வேண்டும். ஐந்து ஆண்டுக்கு மேல் பணியாற்றும் பல்நோக்கு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். துப்புரவுப் பணியாளர் பணி உயர்வு வழங்கிட வேண்டும். 4 ஆண்டுக்கு மேல் அனைத்து திட்ட ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளாகும்'' இவ்வாறு அவர் கூறினார்.