
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று (28/10/2021) சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், அவரது உடல்நலம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலுக்கு அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று (29/10/2021) மதியம் 02.30 மணிக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து வருகிறார். ரத்த ஓட்டத்தைச் சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இன்னும் சில நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" எனத் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற வேண்டி தலைவர்கள், பிரபலங்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில், 'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.