இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாத நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் 164 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் 931 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டுள்ளார். பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பனிப்போர் நிலவி வரும் சூழலில் இருவரும் ஒரே விழாவில் பங்கேற்பது மிக முக்கியமான ஒன்றாக கவனிக்க வைத்தது.
இந்த விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ''பிரதமர் குறிப்பிட்டது போன்று தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டும். தமிழ்மொழியை பிற மாநிலங்களுக்கு பரப்ப வேண்டும். பிற மாநில பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக கொண்டுவர முயற்சிப்பேன். முதல்வர் பேரவையில் அறிவித்தபடி 4,500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை தமிழர்கள் அறிந்திருந்தனர்'' என்று பேசினார்.