Skip to main content

‘நேரம் கொடுத்தால் இபிஎஸ்ஸையும் சந்திப்பேன்’ - அமைச்சர் உதயநிதி பேட்டி 

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

'I will meet Edappadi Palaniswami too' - Minister Udayanidhi interviewed

 

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த அக்டோபர் 21ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் 'நீட் விலக்கு - நம் இலக்கு' என்ற தலைப்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்திட்டு, குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மற்றும் பல திமுக நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.

 

தொடர்ந்து  நீட் விலக்கை வலியுறுத்தி, தொடங்கப்பட்டுள்ள இந்த கையெழுத்து முன்னெடுப்பிற்கு  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு நேரில் சென்று திருமாவளவனிடம் கையெழுத்து பெற்றார். அதேபோல் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவையும் சந்தித்து கையெழுத்து பெற்றார்.

 

வைகோவிடம் கையெழுத்து பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த நீட் தேர்வு ஏற்கனவே அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்குள் வரவழைக்கப்பட்டு இதுவரை 22 குழந்தைகளை எடுத்துக்கொண்டது. அரியலூர் மாவட்டம் அனிதாவில் ஆரம்பித்து இந்த வருடம் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஷ் வரை பலர் உயிரிழந்துள்ளனர். இந்த முறை ஜெகதீசின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரு குடும்பத்தையே இந்த வருடம் நீட் தேர்வால் இழந்துள்ளோம்.  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

 

எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்தோம். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் ஆட்சி அமைந்த பிறகு அதற்கான முழு பணிகளை தமிழக முதல்வர் செய்து வருகிறார். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களை சந்தித்து கிடைத்த கருத்துக்களை வைத்து சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றி உள்ளோம். தற்பொழுது  அந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திப்பீர்களா, குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை சந்திப்பீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு 'நேரம் கேட்டுள்ளோம். எல்லோரையும் சந்திப்போம்' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்